திமுகவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
திமுக தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு செயல்பட்டுவந்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு பரிசாக கே.என். நேருவுக்கு மாநில அளவிலான பதவி வழங்கப்படும் என்று திமுக வட்டாரங்களில் பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளராக கே.என். நேருவை நியமித்து கட்சி பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுகவின் தலைமை நிலைய செயலாளாராக இருந்த டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழு தலைவராக செயல்பட்டுவருவதால், அவருக்குப் பதிலாக கே.என். நேரு தலைமை நிலைய முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் கே.என். நேரு கட்சியின் மாநில பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதால், அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் இந்தப் பதவியில் ஏற்கனவே இருந்துள்ளனர். தற்போது டி.ஆர். பாலு வகித்து வந்த இந்தப் பதவியை அவரிடமிருந்து பறித்து கே.என். நேருவுக்கு திமுக மேலிடம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.