இராணுவத்தைப் பற்றிப் பேச பிஜேபிக்கு எந்த அருகதையும் கிடையாது என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நமது 20 இராணுவ வீரர்களை சீன இராணுவம் ஆணிகள் பதித்த கட்டைகளால் அடித்தே கொன்று, நமது பெருமைக்குரிய நிலப்பரப்பை கைப்பற்றிய பிறகும் ஒன்றுமே நடக்கவில்லை என்று சொன்ன பிரதமர் மோடிதான் இராணுவத்தை அவமதித்தவர். இராணுவத்தைப் பற்றிப் பேச பிஜேபிக்கு எந்த அருகதையும் கிடையாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டிசன்கள், ‘’1996 மற்றும் 2005ல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்குள் துப்பாக்கிகள் அல்லது வெடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு முடிவு செய்தது காங்கிரஸ் தானே. 2008ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியோடு காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டபின் 2008, 2009, 2012 மற்றும் 2013- ல் பாரத பகுதியில் நடந்த ஆக்கிரமிப்புகளை அமைதியாக வேடிக்கை பார்த்ததும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்தா என்பதை காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இப்படி நாட்டின் பகுதிகளை விட்டு கொடுத்து தான் எல்லைகளில் அமைதி காத்ததா?

அண்டைநாட்டிற்கு இராணுவ உதவி செய்து மக்களை கொல்ல துணை நின்ற காங்கிரஸிற்கு என்ன அருகதை இருக்கிறது? இராணுவத்தைப் பற்றி பேச... எந்த நிலப்பரப்பை கைப்பற்றினார்கள் யார் கூறினார்கள் என்று விளக்கம் கூறுங்கள் பார்ப்போம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.