தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்களில், ஆட்சியைப் பிடிக்க 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இப்போது சபையில் திமுக , காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கூட்டணிக்கு  மொத்தம் 97 இடங்கள் உள்ளன.

தற்போது  22 தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக 21 தொகுதிகளைப் பிடித்தால்தான் பெரும்பான்மையை பிடிக்க முடியும். இதனிடையே , கருணாநிதியின்  பிறந்த நாளின் போது தமிழக முதலலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்பார் என்று அண்ணா அறிவாலய வட்டாரங்களில் மகிழ்ச்சிப் பேச்சு அடிபடுகிறது.


இந்நிலையில்தான் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ஸ்டாலின் கருணாநிதி பிறந்தநாளில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பேசிய ஸ்டாலின், ஏற்கனவே கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மோடி ஆட்சிக்கு முடிவு கட்டக் கூடிய வகையில் வாக்களித்துள்ளீர்கள். அதன் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வர இருக்கிறது. 

அதேபோல 22 சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளும் அன்றைய தினம் வரவுள்ளது. திமுக கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு தேவை 118 இடங்கள். 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும். அப்போது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்து திமுக ஆட்சியைப் பிடிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்த ஸ்டாலின், மே 23 அன்று மோடி வீட்டுக்குப் போவது போல எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் வீட்டுக்குப் போகும். கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி மலரும் என்று ஸ்டாலின் நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.