காங்கிரஸுக்கு வந்த சோதனையா இது.? பேசமால் காங்கிரஸை மம்தா கட்சியுடன் இணைச்சுடுங்க.. திரிணாமூல் தலைவர் ஐடியா!
காங்கிரஸ் பழமையான கட்சி. ஆனால், அந்தக் கட்சி ஏன் காணாமல் போகிறது என்றுதான் தெரியவில்லை. நாங்கள் அந்தக் கட்சியின் ஒரு பகுதிதான். ஆனால், தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் நடைபெற்ற தேர்தலில் பஞ்சாப் தவிர்த்த 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “தோல்வியிலிருந்து நாங்கள் பாடம் கற்போம். மக்கள் நலனுக்கான எங்களுடைய பணிகள் தொடரும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் கட்சியோடு காங்கிரஸ் கட்சியை இணைத்து விடலாம் என்று பேசி அதிரடித்திருக்கிறார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஃபர்காத் ஹக்கீம் கூறுகையில், “ஐந்து மாநிலங்களில் தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, பாஜகவை எதிர்த்து எப்படி போராடும்? காங்கிரஸ் பழமையான கட்சி. ஆனால், அந்தக் கட்சி ஏன் காணாமல் போகிறது என்றுதான் தெரியவில்லை. நாங்கள் அந்தக் கட்சியின் ஒரு பகுதிதான். ஆனால், தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, காங்கிரஸ் கட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம். தேசிய அளவில் காந்தியடிகள், சுபாஷ் சந்திரபோஸ் கொள்கைகளை கொண்டு கோட்சேவின் கொள்கைகளுக்கு எதிராக போராடலாம்” என்று ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
இதேபோல திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியால் பாஜகவை எதிர்த்து போரிட முடியாது. பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் மம்தா பானர்ஜி போன்ற தலைவர்தான் தேவை. இதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்துதான் மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். ஆனால், திரிணாமூல் காங்கிரஸோடு காங்கிரஸ் கட்சியை இணைத்துவிட வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.