அதிமுகவிற்கு தலைமையேற்க தயாராகும் தீபா...!!! – பிரதமரை சந்திக்க திட்டம்...
அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறி கிடப்பதாகவும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்டு வந்த அதிமுக எனும் எஃகு கோட்டை டிசம்பர் 5 ஆம் தேதியில் இருந்து சிறிது சிறிதாக தகர்க்கபட்டு வருகிறது.
அதிமுகவை உருவாக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணியாக பிரிந்து விரிசல் விட ஆரம்பித்தது. அப்போது ஜா.ஜெ என்ற இரு அணிகள் உருவாகினாலும் மாபெரும் தொண்டர்கள் ஆதரவுடன் அதிமுகவை கைப்பற்றினார் ஜெயலலிதா.
1991 ஆம் ஆண்டு முதன் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மக்களின் பெரும் ஆதரவை பெற்று ஒவ்வொரு கட்டத்திலும் திறம்பட கையாண்டார்.
அனைத்து துறைகளிலும் பெண்களை பின்னுக்கு தள்ள துடிக்கும் சில ஆண்கள் மத்தியில் மிகவும் சிரமமான அரசியலில் தன்னை முன்னிலை படுத்தி அனைவரையும் தனக்கு கீழே வைத்து வலிமையுடன் கட்சியை வழிநடத்தினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரின் உற்ற தோழியாக இருந்த சசிகலாவிடம் கட்சி பணிகள் ஒப்படைக்கப்பட்டன. தீவிர விசுவாசிகளாக திகழ்ந்த அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் எல்லாம் சசிகலா பக்கம் திரும்பினர்.
ஆனால் முதலமைச்சர் பதவி மட்டும் ஒ.பி.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பதவி ஆசை யாரை விட்டது என்பது போல் சசிகலா ஒ.பி.எஸ்சின் பதவியை வலுக்கட்டாயமாக பறித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பன்னீர் சசிகலாவை நேரடியாக எதிர்த்தார். ஜெயலலிதா மரணத்தில் ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த தொண்டர்களுக்கு ஒ.பி.எஸ் வழிகாட்டுதலாய் திகழ்ந்தார்.
இதைதொடர்ந்து ஒ.பி.எஸ்சின் வீடு தேடி படையெடுத்தது அதிமுக தொண்டர்கள் கூட்டம். பின்னர், சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்கும் நேரம் பார்த்து பலநாட்களாய் வராத சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு திடீரென சசிகலாவின் தலையில் மண்ணை வாரிபோட்டது.
இதையடுத்து கட்சிக்காக டிடிவியையும் ஆட்சிக்காக எடப்பாடி பழனிச்சாமியையும் நியமித்து விட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. தொடர்ந்து தமிழகத்தில் பல நிகழ்வுகள் அரங்கேறின.
ஒ.பி.எஸ் பின்புலத்தில் பாஜக தான் இயங்குகிறது என்பது தெரிந்தும் திமுகவை குற்றம் சுமத்தினர் சசிகலா தரப்பினர்.
எடப்பாடி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒவ்வொரு விசயத்திலும் மத்திய அரசுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்ததால் தினகரனுக்கு எதிராக அதிமுக செயல்பாடுகள் நகர்ந்தன.
இதனால் சசிகலா பன்னீருக்கு நெருக்கடி தந்தது போல் தினகரன் எடப்பாடிக்கு நெருக்கடி தர ஆரம்பித்தார். இதையறிந்த பாஜக தினகரனை தூண்டில் போட்டு திகாருக்கு தூக்கியது.
41 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த தினகரன் இரண்டாக இருந்த அதிமுகவை மூன்றாக பிரிக்க திட்டமிட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என 34 பேர் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி கட்சியை தினகரனிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சி கலைக்கப்படும் என எடப்பாடியை மிரட்டி வருகிறார்கள்.
இதனாலையே தமிழகத்தில் அரசு செயல்பாடுகள் முடங்கி கிடக்கின்றன. இதுகுறித்து மற்ற எதிர்கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இதனிடையே சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், எங்களுக்கே கட்சியையும் சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் லாரி லாரியை பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
சந்து கேப்பில் அரசிலுக்கு உள்ளே புகுந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதிதாக பேரவை ஒன்றை தொடங்கினார்.
ஆரம்பத்தில் நன்றாக பேட்டி அளித்தாலும் போக போக பேரவையில் செம்ம சொதப்பல்.
இதையடுத்து தற்போது அதிமுகவையே கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையத்தில் தன் பங்கிற்கு 52, 000 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்து கொண்டு கட்சியை நடத்த முடியாது என்றும், கட்சிக்கு தொண்டர்களின் பலம் அவசியம் எனவும் தெரிவித்தார்.
எங்களிடம் தொண்டர்கள் பலம் அதிகமாகவே உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்தால் 2 லட்சம் வரை பிரமாணபத்திரம் தாக்கல் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடப்பதாகவும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்தவுடன் பிரதமரை சந்திப்போம் எனவும் தெரிவித்தார்.
விரைவில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான வேதா இல்லமட்டும் அல்லாமல் அவருடை சொத்துக்களை அனைத்தும் சட்டப்படி மீட்டெப்பதுடன் தற்போது வேதா இல்லத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தப்போவதாகவும் அப்போது அவர் கூறினார்
ஒரு பேரவையையே ஒழுங்காக வழிநடத்த முடியாத தீபாவால் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுகவை வழி நடத்த வேண்டும் என்று நினைப்பது சாத்தியமா? என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.