ஆந்திராவில் அண்மையில்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில்,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார். 

வரும் 30 ஆம் தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் ஆந்திர பிரதேச முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டியும் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஜெகன்மோகனின் அமைச்சரவையில் நடிகை ரோஜாவும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயலசீமா மண்டலம்  சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ரோஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் காளி பானு பிரகாஷை 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ரோஜாவுக்கு 79,499 வாக்குகளும், காளி பானு பிரகாசுக்கு 76,818 வாக்குகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.