2004  ஆம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை ஜெகன் மோகனின் தந்தை ராஜசேகர ரெட்டி ஆந்திர முதலமைச்சராக  இருந்த போது, தனது தந்தையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு முதலீடுகளை பெற்றதாக ஜெகன் மோகன், அவரது ஆடிட்டரும் கட்சியின் பொதுச் செயலாளருமான விஜயசாய் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐயால் 11 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தன் மீதான குற்றங்களை ஜெகன் மோகன் மறுத்த போதிலும் 2012ம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 16 மாதங்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த ஜெகன் மோகன், தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரானார்.

2012 ம் ஆண்டிற்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகாத ஜெகன் மோகன், எதிர்க்கட்சி தலைவர் பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால், வாரத்திற்கு ஒரு முறை விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்கும்படி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். பிறகு முதலமைச்சராக  பொறுப்பேற்றதால், அரசு பணிகள் காரணமாக நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த சிபிஐ, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தான். ஜெகன் மோகன் முதலமைச்சராக உள்ளதால் அரசியல், பணம், அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்கக் கூடும். 

2011ம் ஆண்டு அவர் எம்.பி.,யாக இருந்த போது சாட்சிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது. முதலமைச்சரின் மகன் எனக் கூறி பலரையும் அவர் விலைக்கு வாங்கி உள்ளார். தற்போது முதலமைச்சராக  உள்ளதால் இதற்கு வாய்ப்புக்கள் அதிகம். முதலமைச்சராக  இருக்கும் ஒருவருக்கு வாரத்திற்கு ஒருமுறை 275 கி.மீ., தூரம் பயணித்து விஜயவாடா கோர்ட்டில் ஆஜராவது இயலாத காரியம் அல்ல என தனது மனுவில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ –யின் இந்த கிடுக்கிப்பிடி  பதில் மனுவால் ஜெகன் மோகனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.