கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்,ஆர். காங்கிரஸ் கட்சி 22 இடங்களை கைப்பற்றி மக்களவையில் நான்காவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை ஜெகன் மோகனாகட்டும், சந்திர பாபு நாயுடுவாகட்டும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் போராடி வருகின்றனர்.

இந்நிலையில்தான் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவியை வழங்க பாஜக முன்வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஜெகன் மோகன் துணை சபாநாயகர் பதவியை தங்கள் கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஆந்திர மாநிலத்துக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை துணை சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.
அப்படி ஏற்றுக் கொண்டால் அது ஆளும் கட்சியுடன் மறைமுக கூட்டணி வைப்பதாகப் பார்க்கப்படும். ஆந்திரப் பிரதேசத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வரை துணை சபாநாயகர் பதவியை எங்கள் கட்சி ஏற்காது என்றும் ஜெகன் திட்டவட்டமாக தெரிவித்தார்..

ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கெனவே சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.