J.Deepa press meet about sasikala

சசிகலாவுக்கு தனது கணவர் மீதெல்லாம் பாசமில்லை என்றும், அரசியல் காய்கள் நகர்த்தவே அவர் சிறையில் இருந்து பரோலில் வந்துள்ளார் என்றும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுக்கொண்டதாக வந்த செய்தி வதந்தி என்று தெரிவித்தார். தான் மனுவை திரும்ப பெறவில்லை என்றும் மேலும் பல பிரமான பத்திரங்களை வரும் 13ம் தேதி கூடுதல் ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கணவர் நடராஜன் மீதான பாசம் என்பதெல்லாம் சசிகலாவின் நாடகம் என்று கடுமையாக குற்றம்சாட்டிய தீபா, சசிகலா, மனிதாபிமானம் இல்லாதவர் என்பதற்கு உதாரணம், மருத்துவமனையில் இருந்த தனது அத்தையை பார்க்க அனுமதிக்காமல் நடுரோட்டில் தன்னை நிற்க வைத்தவர் தான் என்றும் கூறினார்.

தற்போது அரசியல் காய்கள் நகர்த்தவே அவர் சிறையில் இருந்து பரோலில் வந்துள்ளார் என்றும் தீபா தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை தொடர்ந்து குரல் கொடுக்க போவதாகவும் தீபா குறிப்பிட்டார்.