Jayalalitha personal secretary Poonkundran knows many secrets about sasikala
கடந்த வாரங்களில் வருமான வரித்துறை ரெய்டு தமிழகத்தில் வீடுகட்டி அடித்ததிலேயே மிக தில்லான செயல், ஜெயலலிதாவின் போயஸ் வீட்டுக்குள் நுழைந்ததுதான். போயஸ் வீடு இதற்கு முன் தி.மு.க. ஆட்சியின்போது ரெய்டில் சிக்கியிருந்தது தான். ஆனால் அப்போதிருந்த ஜெயலலிதாவின் ஆளுமைக்கும், சமீபத்தில் அவர் எட்டிவிட்டு சென்றிருந்த அரசியலதிகார உச்சத்துக்கும் பெரும் வேறுபாடிருக்கிறது.
ஆக நினைவு இல்லமாக மாற்றப்படுவதற்காக அரசுடமையாக்கப்பட இருக்கின்ற ஜெயலலிதாவின் வீட்டுக்குள் ஐ.டி. துறை அலையடித்து வரவேண்டியதன் அவசியமென்ன? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இது பற்றி விரிவாய் விசாரித்தால்...
பூங்குன்றனின் வீட்டில் ரெய்டு நடந்தபோது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாம். கடந்த ஐந்து வருடங்களாக மரத்தொழிலில் பூங்குன்றன் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. சுமார் 100 கோடிக்கு பல வகையான முதலீடுகளில் அவர் இறங்கியிருந்தாராம். நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலயாய்வுப் பிரிவில் வைத்து அவரிடம் இது பற்றி விசாரித்தபோது மென்று முழுங்கி பேசியிருக்கிறார்.
.jpg)
குறிப்பாக 2011 டிசம்பர் 16ம் தேதியன்று ஸ்ரீ ஹரி சந்தனா எஸ்டேட்ஸ், ஸ்ரீ ஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ஜாஸ் சினிமாஸ் உட்பட 9 நிறுவனங்களுக்கு டைரக்டராக அவர் பொறுப்பேற்ற விஷயங்களை பற்றி கேட்டபோது அவரிடம் சரியான பதிலில்லையாம். ஜாஸ் சினிமாஸில் இருந்து தாமதமாக விலகினாலும் மற்ற பொறுப்புகள் அனைத்திலுமிருந்து 2013-ல் விலகிவிட்டார். அதாவது சசி குடும்பத்தை ஜெ., விலக்கி வைப்பதற்கு முன்பாக இது போன்ற பல பொறுப்புகளை ஏற்றவர், சசி குடும்பம் ரீ எண்ட்ரி ஆனதும் அந்த நிறுவனங்களில் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். இதையெல்லாம் தான் குடைந்து குடைந்து கேட்டிருக்கின்றனர் அதிகாரிகள்.
முதலில் வாய் பேச மறுத்தாலும் கூட பிறகு தன் முன் வைக்கப்பட்ட ஆதார ஆவணங்களை பார்த்ததும் மிரட்சியில் பேச்சு வந்திருக்கிறது தானாக. அப்போது அதிகாரிகளே எதிர்பாராத வகையில் ரெய்டுக்கு சம்பந்தமில்லாத ஒன்றை கக்கியிருக்கிறார் பூங்குன்றன். அது கடந்த வருடம் செப் 22-ம் தேதியன்று ஜெயலலிதா அப்பல்லோவிற்கு கொண்டு செல்லப்பட்ட சி.சி.டி.வி.காட்சிகள்தான். அது தன்னிடம் இருப்பதாக பூங்குன்றன் கூறியிருக்கிறார் இதைக் கேட்டதும் மளமளவென காரியத்திலிறங்கிய ரெய்டு டீம் நீதிமன்ற ஃபார்மாலிட்டிகளை முடித்துவிட்டு ரெய்டு பணியிலிறங்கியிருக்கிறது.
.jpg)
ஐ.டி.யின் கூடுதல் இயக்குநர் தலைமையில் சுமார் 15 அதிகாரிகள் தனி வாகனத்தில் போயஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கின்றனர். போயஸ் இல்லத்தில் தனி இரண்டு மாடி கட்டடத்தில்தான் பூங்குன்றனின் அறை உள்ளது. அதை முற்றுகையிட்டு லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை ஆராய்ந்ததில் ஜெ., சுகவீனமான அன்று நடைபெற்ற விஷயங்களின் காட்சிகள் அதில் இருந்திருக்கின்றன. 2016 செப் 22 இரவு 10:13 மணிக்கு மூர்ச்சையான நிலையில், நைட்டி உடையில் ஜெயலலிதா ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவது உள்ளிட்டவை இருந்திருக்கின்றன.
இது உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் பலவற்றை கைப்பற்றியிருக்கும் ஐ.டி. துறை, தேவைப்பட்டால் மீண்டும் சோதனை உண்டு என்கிறார்கள். இந்த ரெய்டின் போது சசி அறையில் கைப்பற்றப்பட்ட பொருட்களை பற்றி மட்டும் மூச்சு விட மறுக்கிறது ஐ.டி.துறை.
இது போக அ.தி.மு.க. அறக்கட்டளைகள் விவகாரமும் தனி ரூட்டில் பஞ்சாயத்து ஆகிக்கொண்டிருக்கிறதாம். இரண்டில் ஒரு அறக்கட்டளைக்கு ஜெயலலிதாவும், பூங்குன்றனும் நிர்வாகிகளாக இருந்தனராம். வருடாவருடம் பலப்பல கோடிகள் இந்த அறக்கட்டளைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட அரை நூறு கோடி ரூபாய் அளவிற்கு அறக்கட்டளைக்கு சொத்து இருக்கிறது.
.jpeg)
ஜெ., இறந்த பிறகு இரண்டு அறக்கட்டளைகளும் பூங்குன்றன் வசம் வந்திருக்கின்றன. சசி பரோலில் வெளியே வந்தபோது இந்த அறக்கட்டளையின் பணம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை மாற்றம் செய்வதற்காக பூங்குன்றனிடம் சுமார் 20 வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது என்கிறார்கள். இந்த ஆவண மாற்றத்துக்காக சில பத்திரப்பதிவாளர்களை சசி டீம் அணுகியபோதுதான் ஐ.டி.துறை எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து ரெய்டு மேளாவை துக்கியிருக்கிறது என்கிறார்கள்.
இப்போது ஐ.டி.துறையின் வழியே ஜெ., சுகவீனம் தொடர்பான சி.சி.டி.வி.காட்சிகள் மற்றும் அ.தி.மு.க. அறக்கட்டளையின் பண விஷயங்கள் என இரண்டு மிக முக்கிய லகான்கள் டெல்லியின் கைகளுக்குப் போயுள்ளன. இவை அனைத்தையும் சட்டரீதியாக டீல் செய்ய வேண்டுமென்றால் தகுந்த புகார்கள், ஆதாரங்கள் அவசியம். குறிப்பாக ஒரு அப்ரூவர் அவசியமாம். அந்த அப்ரூவர்தான் பூங்குன்றன் என்கிறார்கள்.
.jpg)
‘நீங்க நல்ல மனுஷன், ஜெயலலிதாவுக்கு தலைமுறையாக விசுவாசிகளாக இருக்கிற குடும்பமுன்னு தெரியும். ஒரு ரப்பர் ஸ்டாம்பாக உங்களை ரெண்டு பெண்களுமே பயன்படுத்தியிருக்கிறாங்கன்னு தெரியும். அதனால அப்ரூவராகிடுங்க. எந்த பிரசனையுமில்லாம! எந்த அச்சுறுத்தலுமில்லாம நிம்மதியான வாழ்க்கைக்கு நாங்க உத்தரவாதம் கொடுக்கிறோம்.’ அப்படின்னு பூங்குன்றனை கன்வின்ஸ் செய்திருக்கிறது ஒரு டீம்.
பூங்குன்றனுக்கும் சசி வகையறா என்றாலே வெறுப்புதான். ஆனால் தினகரன் மீது மட்டும் ஒரு நல்ல எண்ணம் உள்ளது. அதனால் தினாவிடம் மட்டும் தன்னை அப்ரூவர் ஆக சொல்லி சிலர் நிர்பந்திப்பதாகவும், தனக்கு வேறு வழியில்லை என்ற ரீதியிலும் பேசியிருக்கிறார்.
இதைக் கேட்டு வெறுமையாய் சிரித்திருக்கிறார் தினகரன்.
பூங்குன்றன் அப்ரூவர் ஆனால் இந்த இரண்டு விஷயங்களோடு மட்டும் விஷயங்கள் நின்றுவிடாது. இதை வைத்து ஒட்டுமொத்தமாக சசி டீம் வேட்டையாடப்படும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணக்கு.
கவனிப்போம்!
