Jayalalithaa will even revenge him who exposed his scandals
யானையும், பாம்பும் தான் பழிவாங்குவதற்கு பெயர் பெற்றவை என்று நூல்களில் படித்திருக்கிறேன். ஆனால், அவை இரண்டும் பழிவாங்குவதில் ஜெயலலிதாவிடம் பிச்சை எடுக்க வேண்டும். பாம்பும், யானையும் கூட அவற்றுக்கு தீமை செய்தவர்களை மட்டும் தான் பழிவாங்கும். ஆனால், ஜெயலலிதாவோ அவரது ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களைக் கூட பழிவாங்கத் துடிப்பார். எனது விவகாரத்திலும் அது தான் நடந்தது.
மரக்காணம் கலவரத்தில் அப்பாவி சொந்தங்கள் இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு போராடியதற்காக என்னை தமிழக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால், என்னை அவ்வளவு எளிதில் வெளியில் அனுப்பிவிடக் கூடாது என்பதில் ஜெயலலிதாவும், காவல்துறையும், உறுதியாக இருந்தனர். தடையை மீறிப் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நானும், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. நிர்வாகிகளும் விழுப்புரம் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தோம்.
பிணை மனுக்களை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், அனைவரையும் பிணையில் விடுதலை செய்து 03.05.2013 அன்று ஆணையிட்டது. விழுப்புரம் வழக்கு என்பது தடையை மீறி போராட்டம் நடத்திவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது தொடர்பானது ஆகும். கைது செய்யப்பட்ட எவரும், எந்த குற்றமும் செய்யாதவர்கள் ஆவர். இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு தான் அனைவருக்கும் பிணை வழங்கியுள்ளது.
நிரந்தரமாக சிறை வைக்க சதி
மிகமிகச் சாதாரணமான இந்த வழக்கில் கூட எனக்கு பிணை வழங்கப்பட்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அதற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பொதுவாக இதுபோன்ற அரசியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிப்பதற்கு முன்பாக அரசே விடுதலை செய்வது தான் வழக்கம் ஆகும். ஆனால், இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சி மீது ஆளுங்கட்சி எவ்வளவு காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, இந்த வழக்கில் எனக்கும், மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட பிணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டதாக இந்த வழக்கை கையாளும் விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வாய்மொழியாக தகவல் அளித்ததால் 300-க்கும் மேற்பட்டோர் பிணையில் விடுதலை ஆக முடியவில்லை. உண்மையில் அப்படி எந்த உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. பா.ம.க.வினர் விடுதலை ஆவதைத் தடுக்க காவல்துறை எத்தகைய மோசடிகளை கையாளுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
அதுமட்டுமின்றி, நான் விடுதலையாவதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்பதற்காக பழைய வழக்குகளை எல்லாம் தூசு தட்டி எடுத்தது அரசு. மாமல்லபுரம் மாநாடு தொடர்பான 2 வழக்குகள், மதுரை வழக்கு, கூடங்குளம் அணு உலையை எதிராக பேசிய வழக்கு என மேலும் 4 வழக்குகளில் என்னை கைது செய்தது.
மதுரை வழக்கும் அலைக்கழிப்பும்!
விழுப்புரம் வழக்கிலும், மாமல்லபுரம் வழக்குகளிலும் எங்களுக்கு பிணை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மே 4&ஆம் தேதி நானும் மற்றவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால், என்னை விடுதலை செய்ய விரும்பாத காவல்துறையினர் என் மீது பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை தூசு தட்டி எடுத்து அதில் சிறையில் அடைக்க முயன்றது. ஆனால், அவ்வழக்கில் மதுரை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் என்னை நேர்நிறுத்தியோ அல்லது காணொலி கலந்தாய்வு மூலமோ நீதிமன்றக் காவலில் அடைக்க ஆணை பெற்றால் மட்டும் தான் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க முடியும்.
தொண்டர்கள் போராட்டம்!
எனவே, மே 4-ஆம் தேதி மாலை வாக்கில் என்னை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டவாறு நான் கடுமையாக முதுகுவலியாலும், உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வந்தேன். அதைப்பொருட்படுத்தாமல் என்னை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அலைக்கழிக்க ஏற்பாடு நடப்பதை அறிந்து பா.ம.க. தொண்டர்கள் கொந்தளித்தனர். அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் ஏறிய அவர்கள் என்னை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் ஒருவர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையை கிழித்து கயிறாக திரித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை நாங்கள் சமாதானப்படுத்தி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினோம்.
இந்த போராட்டத்திற்கு பணிந்த அதிகாரிகள், என்னை மதுரைக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டனர். அதற்கு பதிலாக காணொலி கலந்தாய்வு முறையில் மதுரை நீதிபதி மூலம் என்னை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான ஆணை பெற காவல்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக என்னை நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காணொலி கலந்தாய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 3 மணி நேரம் என்னை காக்க வைத்து கொடுமைப்படுத்தினர். ஆனால், காணொலி கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. ஒரு கட்டத்தில் மதுரை நீதிபதி நீதிமன்றக் காவலுக்கு ஆணையிட முடியாது என்று மறுத்து வெளியேறி விட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால் எனது காவல் நீட்டிக்கப்படாத நிலையில் என்னை சட்டவிரோதக் காவலில் அடைத்தனர். அப்போது இரவு 11.00 மணி.
நள்ளிரவில் எழுப்பி விசாரணை
அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து சிறைக்காவலர்கள் வந்து என்னை எழுப்பினார்கள். அப்போது நள்ளிரவு 12.00 மணியைத் தாண்டி விட்டது. எதற்காக எழுப்பினீர்கள்? என்று கேட்டபோது, மதுரை வழக்கில் என்னை நீதிமன்றக் காவலில் அடைக்க ஆணையிடுவதற்காக திருச்சி நீதிபதி வந்திருப்பதாகக் கூறினார்கள். பின்னர் நீதிபதி முன்னிலையில் நேர்நிறுத்தப்பட்டேன். அங்கு ஆஜரான மதுரை காவல்துறை அதிகாரி ஒருவர், மதுரை வழக்கில் நான் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதாகக் கூறி, என்னைக் காவலில் வைக்க ஆணையிடும்படி கோரினார்.
தலைகுனிந்த நீதிபதி
அதைக்கேட்ட நான், ‘‘கடந்த 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதாக காவல்துறை அதிகாரி கூறுகிறார். கடந்த 9 மாதங்களில் பலமுறை நான் மதுரை சென்றுள்ளேன். அப்போதெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தான் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். அவ்வாறு இருக்கும்போது எப்படி நான் தலைமறைவாக இருக்க முடியும்’’ என்று நீதிபதியிடம் கேட்டேன். அதைக்கேட்ட நீதிபதி தலையை குனிந்து கொண்டார். அவரிடமிருந்து பதில் வரவில்லை. அவரது தர்மசங்கடமான நிலையைப் பார்த்த நான்,‘‘ நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்... உங்கள் கடமையை செய்யுங்கள்’’ என்று கூறினேன். அவரும் என்னை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க ஆணையிட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். தொடர்ந்து அந்த வழக்கில் நான் சிறையில் அடைக்கப்பட்டேன்.
திருக்கழுக்குன்றத்துக்கு!
இந்த நேரத்தில் இன்னொரு கொடுமையையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மே 3&ஆம் தேதி மாமல்லபுரம் மாநாட்டு வழக்கு தொடர்பாக திருக்கழுகுன்றம் நீதிமன்றத்தில் என்னை நேர்நிறுத்த சிறைத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், நான் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்துச் செல்வதற்காக பழைய வேன் ஒன்று கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தது. அதில் 300 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்வது சாத்தியமற்ற ஒன்று. அதனால் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்திற்கு என்னால் நேரில் வர இயலாது என்று கூறினேன்.
ஆனால், நீதிமன்றத்திற்கு நான் வந்தாக வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். எனது உடல்நிலை குறித்து விளக்கிய நான்,‘‘ஏற்கனவே எனது உடல்நிலை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு மயக்கமாக உள்ளது. இந்த சூழலில் அவ்வளவு தூரம் என்னால் பயணம் செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு மருத்துவரை அழைத்து வாருங்கள். பயணம் செய்யும் அளவுக்கு எனது உடல்நிலை வலிமையாக இருப்பதாக அவர் கூறினால் என்னை அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள்’’ என்று கூறினேன். அதன்படி எனது உடல்நிலையை ஆய்வு செய்த சிறை மருத்துவர் பயணம் செய்யும் அளவுக்கு எனது உடல்நிலை இல்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து திருக்கழுக்குன்றத்துக்கு என்னை அழைத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிட்ட சிறைத்துறையினர், அதற்கு பதிலாக உள்ளூர் நீதிபதி ஒருவரை அழைத்து வந்து காவல் ஆணையை பெற்றனர். இதைவிடக் கொடுமை கூடங்குளம் வழக்குகளில் காவல்துறை கடைபிடித்த முன்னுக்குப்பின் முரணான நிலைப்பாடு தான். அதுகுறித்து சில அத்தியாயங்களுக்குப் பிறகு எழுதுகிறேன்.
அன்புமணி வரை நீண்ட அதிகாரத் திமிர்!
நாளை எழுதுகிறேன்! இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
