ஸ்ரீதேவியின் மரண விவகாரத்தையும் தாண்டி தமிழகத்தில் தடதடக்கும் விவகாரம், சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை. அந்த சிலையின் முகத்துக்கும் ஜெயலலிதாவின் முகத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லாத நிலையில், வலைதளங்களில் ஆட்சியை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர் பொதுமக்கள். 

‘இது அஞ்சலி தேவியின் முகமா, எடப்பாடி மனைவியின் முகம் போலிருக்குதே! ஒருவேளை சசிகலாவின் முகமோ?’ என்றெல்லாம் மீம்ஸ் போட்டும், ‘வாழ்க்கை பிச்சை போட்ட தலைவியின் சிலையை உருப்படியாக வடிக்கத் தெரியாத இவர்களா இந்த மாநிலத்தை உருப்படியாக ஆள்வார்கள்?’ என்று எடப்பாடி மற்றும் பன்னீர் கோஷ்டியை கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். 
இந்நிலையில் ஜெயலலிதாவின் சிலையானது, அவரது கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே இப்படி அலங்கோலமாக அமைக்கப்பட்டதை ‘ஜெயலலிதா செய்த முன்வினை அவரது சிலையை சுட்டிருக்கிறது.’ என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

அதென்ன முன்வினை?...எனும் கேள்விக்கு விளக்கம் தரும் அவர்கள் “ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமையும் போதெல்லாம் முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விஷயங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவமதிப்பார், அசிங்கப்படுத்துவார். அந்த வகையில்தான் சென்னை கடற்கரை சாலையிலிருந்த கண்ணகி சிலைக்கு ஜெயலலிதாவின் உத்தரவு படி ஆடிய அரசு செய்த இடையூறுகள் கொஞ்ச நஞ்சமில்லை. ’கண்ணகியின் சாபம் சும்மா விடாது’ என்று அப்போதே தி.மு.க.வினர் எச்சரித்தனர். 

அதேபோல் சிவாஜி கணேசனுக்கு நிறுவப்பட்ட சிலையை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டபோதும் ஜெ., தலைமையிலான அரசு செய்த அதிகார இடையூறுகள் கொஞ்ச நஞ்சமில்லை. 

இதையெல்லாம் தாண்டி கன்னியாகுமரியில் பாறையின் மீது திருவள்ளுவர் சிலையை அமைத்தது கருணாநிதி அரசு. அடுத்து வந்த ஜெ., அரசு, வாஸ்து பார்ப்பதில் குறியாக இருந்தது. அதன்படி ‘திருவள்ளுவர் சிலை நின்ற கோலத்தில், நோக்கியிருக்கும் திசை ஆட்சிக்கு ஆபத்து தரும்’ என்று யாரோ ஒரு ஜோதிடர் கொளுத்திப் போட, அந்த சிலையின் அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வரலாமா? என்று கூட ஜெ., வட்டாரம் யோசித்ததாம். ஆனால் ‘வள்ளுவர் சிலையில் கைவைத்தால் மக்கள் பொறுக்க மாட்டார்கள்’ என்று அதிகாரிகள்தான் முட்டுக்கட்டை போட்டனர். அதன் பிறகு அ.தி.மு.க.வின் அப்போதைய ஆட்சியில் அந்த சிலை பெரிதாய் பராமரிக்கப்படவில்லை! என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆக இப்படி தமிழகத்தினுள் மிக முக்கிய மற்றும் மக்கள் செல்வாக்குடையை சென்சிடீவ் நபர்களின் சிலைகளில் ஜெ., கை வைத்ததன் விளைவும், சாபமுமே இன்று அவரது கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே அவர் சிலையை அஷ்டகோணலாக்கி இருக்கிறது. 

இது பாவத்தின் விளைவுதான் என்பதை எளிதாய் ஏற்றுக் கொள்ள முடியும். காரணம், ஆட்சியில் இருப்பவர்களின் சார்பாக சிலை வைக்கப்படுகிறது. அவர்கள் எத்தனை முறை இந்த சிலை உருவாவதை கண்டிருப்பார்கள்? கவனித்திருப்பார்கள்! அதையெல்லாம் தாண்டி, அவர்களின் கண்ணில் மண்ணை தூவி வந்து சிலை இப்படி விமர்சனத்தை சம்பாதித்து, வெறுத்து ஒதுக்கப்படுகிறதென்றால் இது சாபத்தின் விளைவே அன்றி வேறேது?” என்கிறார்கள். 

நெசமா அம்மா?! இதற்கு பதில் ஜெ.,வின் ஆன்மாவுக்கே வெளிச்சம்.