ஜெயலலிதா வழியில், கல்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டியுள்ளார்.

 

தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சியை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வந்தது. சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10-வது தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சோதனை ஓட்டம் நடந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது.

அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ‘’மாணவர்களுக்குள் பல ஆயிரம் திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாணவர்களும் தங்களது தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். 

ஜெயலலிதா வழியில், கல்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறார். கல்விக்காக தினம், தினம் சிந்தித்து பல வளர்ச்சி பணிகளை செங்கோட்டையன் ஆற்றி வருகிறார்’’ என கூறினார்.