தமிழ் சினிமாவின் மாஸ் பில்ட் - அப் காட்சிக்கான எந்த குறையுமில்லாமல் இருக்கிறது அந்த ரியல் வீடியோ. ஆக்ஸிடெண்டலாக முதல்வரான எடப்பாடி பழனிசாமி எந்தளவுக்கு அரசியலை ஆட்டிப் படைக்கிறார் என்பதை துல்லியமாக காட்டுகிறது அது. 

பிரசார காலங்களில் ஜெயலலிதா வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்வாரே தவிர இறங்கி வந்து சீன் செய்ய மாட்டார். ஆனால் எடப்பாடியாரோ டீ கடையில் வந்தமர்வதில் துவங்கி வயல்வெளிகளில் மம்பட்டி பிடிப்பது வரை செய்யாத அக்கப்போர்களே கிடையாது பிராட்சாத்தின் நடுவில். இது போதாதென்று காதில் மைக்கை வேறு மாட்டிக் கொண்டு ஹைடெக்காக பின்னிப் பேர்த்தெடுக்கிறார். இதெல்லாம் போகட்டும், ஆனால் சமீபத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரத்துக்கு சென்றார் மனிதர். 

அப்போது வயல்வெளி ஒன்றுக்கு இறங்கி வருகிறார். அவரின் பின்னே அமைச்சர் காமராஜும் இறங்கி வருகிறார். எடப்பாடியார் தரையில் கால் வைத்த நொடியில் துவங்கி வயலுக்கு வந்து நிற்பது வரையில் வரிசையாக விவசாயிகள் அவரது காலில் விழுந்து கொண்டே இருக்கின்றனர். யாரையும் வேண்டாம் என்று தடுப்பதேயில்லை. ஏதோ ‘எட்டாம்படி பழனியாண்டி சாமியார்’ போல தன் காலில் விழுபவர்களை ஆசீர்வதித்துக் கொண்டே நடக்கிறார் மனிதர். வயலில் வந்து நின்று, அங்கே வேலை பார்க்கும் ஆண்கள் - பெண்கள் மத்தியில் இவர் வாக்கு கேட்பதும், பதிலுக்கு அவர்கள் ‘எங்க ஆதரவு எப்பவும் உங்களுக்குதானுங்கய்யா’ என்று பம்முவதும் அடடா!அட்டடடடா! காட்சிகள்தான். 

இந்த வீடியோக்களை மேற்கோள் காட்டிப் பேசும் அரசியல் விமர்சகர்கள் “ஜெயலலிதா கூட இந்தளவுக்கு தன்னை கெத்தாக வெளிப்படுத்திக் கொண்டதில்லை இவ்வளவு குறுகிய காலத்தினுள். எடப்பாடியாரின் காலில் விவசாயிகள் விழ வேண்டிய அவசியம் என்ன? முதல்வர் எனும் முறையில் மிகப்பெரிய விவசாய புரட்சியை அவர் உருவாக்கியிருந்தாலும் கூட அவரை வணங்குவதில் நியாயம் இருக்கிறது.  எட்டு வழிச்சாலையால்  விளைநிலத்தை இழந்த பல ஆயிரம் குடும்பங்கள், கஜா சேதாரத்தில் வாழ்க்கை இழந்த விவசாயிகள், தானே புயல் சேதாரத்துக்கு நிவாரணம் கிடைக்காத மீனவர்கள் என்றுதான் இவரது ஆட்சியில் பங்கங்கள் நிறைந்திருக்கின்றன. 

ஆனால் எந்த கஜா மண்ணில் அவரை விரட்டுமளவுக்கு சூழ்நிலை இருந்ததாக சொன்னார்களோ, அதே மண்ணில் இவர் ஓட்டு கேட்டு வருவதும், விவசாயிகள் அவரது காலில் விழுவதும்! சசிக்கவில்லை. எந்த தைரியத்தில் தன்னை இவ்வளவு புகழ்படுத்திக் கொள்கிறார்?  நாடாளுமன்ற தேர்தல் பற்றிய சர்வே ரிசல்டுகள் சில அ.தி.மு.க. கூட்டணி 27 இடங்களை வெல்லும் என்று சொன்னதன் விளைவா அல்லது மோடி இருக்கிறார்! எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்! என்று  நினைப்பதன் விளைவா?” என்கிறார்கள். ஹும், எடப்பாடியாரின் கெத்து, பலபேரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.