வெள்ளை துண்டால் ஜெயலலிதாவை மூடிவைத்து விழா?! அல்லு தெறிக்கவிடும் அதிமுக
ஏற்கனவே திறக்கப்பட்ட சிலையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதால் புதிய சிலை திறக்கப்பட்டது. ஆனால் புதிய சிலை திறப்பிலும் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்த நாள் விழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அதிமுக தலைமை கழகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இந்தச் சிலையை திறந்து வைத்தனர்.
ஆனால் சிலையில் ஜெயலலிதாவின் முகத் தோற்றமே இல்லை, ஜெயலலிதாவின் முகத்தையே மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள், என்று சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இவ்வாறு ஜெயலலிதா சிலை குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வந்த நிலையில், அச்சிலைக்குப் பதிலாக புதிய சிலை விரைவில் நிறுவப்படும் என அதிமுக வட்டாரங்கள் அறிவித்தன. புதிய சிலை செய்ய ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சிலை வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் ஆந்திராவுக்குச் சென்று சிலையைப் பார்வையிட்டனர் இதைத்தொடர்ந்து, 8 அடி உயரம், 800 கிலோ எடை கொண்ட ஜெயலலிதாவின் புதிய சிலை, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி சென்னை கொண்டுவரப்பட்டது.
விரைவில் புதிய சிலை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணியளவில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் புதிய சிலையைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே திறக்கப்பட்ட சிலையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியதால் புதிய சிலை திறக்கப்பட்டது. ஆனால் புதிய சிலை திறப்பிலும் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது. அதாவது எந்த ஒரு தலைவரின் சிலையை திறப்பதற்கு முன்பு, அச்சிலையைப் பட்டு போன்ற துணியால் போர்த்தி வைப்பது வழக்கம். ஆனால் ஜெயலலிதாவின் சிலை ஒரு வெள்ளை துண்டைக் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதற்குச் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வாறு செய்தவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.