ஜெயலலிதா இறப்பிலும் சர்ச்சை விலகவில்லை என்றால், அவரது சிலையிலும் சர்ச்சைகள் கும்மியடிக்கின்றன. தஞ்சையில் வைக்கப்பட்டுள்ள சிலை குறித்து அதிரடித் தகவல் வெளியாகி இருக்கிறது. 

மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் சிலை திறக்கப்பட்டது. ஆனால், அந்த சிலை ஜெயலலிதா உருவத்தில் இல்லை என சர்ச்சை உருவானது. தஞ்சை ரயிலடியில் உள்ள எம்ஜிஆர் சிலை உள்ளது. 1995-ஆம் ஆண்டிலிருந்தே எம்ஜிஆர் உருவச் சிலை உள்ளது. இதனை திறந்து வைத்ததே அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாதான். சிலைக்கு பக்கத்தில் கடந்த வாரம் திடீரென முளைத்தது ஜெயலலிதா சிலை. அடி பீடத்தில் இருந்து 8 அடியில் 7 லட்சம் மதிப்பில் சிலை நிறுவப்பட்டுள்ளது. ரகசியமாக சிலையை வைக்க வேண்டிய அவசியமென்ன என மீண்டும் சர்ச்சை எழுந்தது. பொது இடங்களில் சிலை வைக்க எத்தனையோ கட்டுப்பாடுகள் இருக்கின்றன. 

அப்படி இருக்க இதை வைப்பதற்காக மூன்று நாட்களாக பீடம் அமைக்கும் பணி நடந்தபோதும் அதைக் கண்டுகொள்ளாத தஞ்சை மாநகராட்சி, “சிலையை யார் வெச்சாங்கன்னு தெரியலையே..” எனத் தந்திரமாகக் கைவிரித்து விட்டது.

அதிமுக தரப்பிலும் ’இந்த சிலையை தாம் தான் வைத்தோம்’ என யாரும் நேரடியாக சொந்தம் கொண்டாடவில்லை. இதனிடையே, “ஏற்கெனவே சென்னையில் அதிமுக தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட பழைய சிலை போல் இது இருக்கிறது. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் எம்பிதான் சென்னை பக்கம் இருந்து இந்த சிலையை நகர்த்திவந்து தனது ஆதரவாளரான பகுதிச் செயலாளர் சரவணன் மூலமாக சத்தமில்லாமல் இங்கே வைத்திருக்கிறார்” என சிலர் கொளுத்திப் போட்டு வருகிறார்கள்.