சுருட்டிப் போட்ட சுனாமியிலிருந்து தமிழகம் மீள முடியாமல் தவித்த 2005-ம் ஆண்டின் ஜனவரி மாதம் அது. திடீரென தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு. ஆம் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்திக்க கிளம்பினார் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஸ்டாலின். என்னாகுமோ? ஏதாகுமோ! என்று அரசியல் அரங்கத்தில் சந்தேகங்கள் சதிராடியது. 

முதல்வரை சந்தித்த ஸ்டாலின், கருணாநிதி சார்பாக 21 லட்சம் ரூபாய் காசோலையை ஜெயலலிதாவிடம் வழங்கினார். கூடவே கருணாநிதியின் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். அதில் ‘கண்ணம்மா மற்றும் மண்ணின் மைந்தன் படங்களின் திரைக்கதை எழுதியதற்காக தனக்கு கிடைத்த ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஸ்டாலினிடம் இரண்டையும் பெற்றுக் கொண்ட ஜெ., ‘எனது நன்றியை உங்கள் அப்பாவிடம் தெரிவியுங்கள்.’ என்றார். 

அந்த சமயத்திலெல்லாம் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரு கட்சிகளின் இடையில் யுத்தம் உச்சத்தில் இருந்த நேரம். அப்போதே ஜெயலலிதாவை எந்த  ஈகோவும் இல்லாமல் சந்தித்தார் ஸ்டாலின். இத்தனைக்கும் தி.மு.க.வை அழித்தே தீருவது எனும் கங்கணத்துடன் ஜெயின் நடவடிக்கைகள் இருந்த காலகட்டம்தான். ஆனால் அப்பேர்ப்பட்ட ஸ்டாலின், ஜெயலலிதா இல்லாத நிலையில் இப்போதும் ஒரு நிவாரண தொகையை ஆளும் அ.தி.மு.க. அரசின் முதல்வரிடம் தந்திருக்கிறார். 

ஆனால் நேரடியாக தான் செல்லாமல், கழக பொருளாளர் துரைமுருகனையும், சேகர் பாபு எம்.எல்.ஏ.வையும் அனுப்பியுள்ளார். கஜா புயலினால் சேதமடைந்திருக்கும் பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடியை தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் வழங்கியுள்ளார். பழைய சம்பவத்தையும், இன்றைய சம்பவத்தையும் இணைத்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், “எத்தனை பணிகள் இருந்தாலும், எத்தனை தூரத்தில் இருந்தாலுமே கூட ஸ்டாலின் நேரடியாக வந்து இந்த ஒரு கோடி ரூபாய் செக்கை முதல்வர் எடப்பாடியாரிடம் வழங்கியிருக்கலாம். 

ஆனால், தங்களுக்கு எதிராக பெரும் போர் தொடுத்த ஜெயலலிதாவிடம் கூட சகஜமாய் செயல்பட நினைத்தார் ஸ்டாலின். ஆனால் ‘முதல்வரிடம் உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் பள்ளம்தான் உள்ளதா?’ என்று தன்னால் விமர்சிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவருக்கு மனமில்லை. ஆயிரம் இருந்தாலும் ஜெயலலிதா ஜெயலலிதாதான். அவரை சந்தித்து இப்படி நிதியளிப்பது வரலாற்றில் பதியும் கல்வெட்டு. ஆனால் எடப்பாடியாரிடம் கொடுப்பதென்பது சாதாரணமாய் கடந்து செல்லும் செயலென்று ஸ்டாலின் ஈகோவாய் நினைத்துவிட்டார் போல! என்று அறிவாலயத்துக்குள்ளேயே இன்று பரபரப்பு விவாதங்கள் ஓடுகின்றது.” என்கிறார்கள்.