* அமைச்சர் சம்பத்துக்கு புள்ளி விபரங்களுடன் அதிரடி பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது தி.மு.க. கோயமுத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ‘இந்தியாவில், பிற மாநிலங்களைவிட தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.’ என்று சம்பத் சிலாகித்து வைக்க, இதற்குத்தான் ஆவண ரீதியில் பதில் ராக்கெட்டை தயார் செய்கிறார்களாம். (பார்த்து பாஸ், ராக்கெட் யூ டர்ன் அடிச்சுவைக்க போகுது!)

* மேற்கு வங்காளத்தில் ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலைகள், ரதங்களின் சக்கரத்தின் கீழ் நசுக்கப்படும்! என பி.ஜே.பி.யின் மாநில மகளிர் அணி தலைவர் லாக்கெட் பேசியிருப்பது அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. (மேடம் அந்த ஸ்டேட்டுல மம்தாவோட கார் டயருக்கு கீழே உங்க கட்சி நசுங்கி கிடக்குறதை  பார்த்துமா?...)

* பா.ஜ.க.விற்கும், பிரதமர் மோடிக்கும் கைகட்டி, வாய்பொத்தி நின்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து நிற்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி! என்று காட்டுத்தனமாக தாக்கியிருக்கிறார் தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகன். (யண்ணே! வெறும் கட்சிப் பதவிக்காக தலீவரோட பேரன் வரைக்கும் நாம அந்த மாதிரியெல்லாம் நிக்குறப்ப, அவரு தன்னோட முதல்வர் பதவிக்காக, அதுவும் பிரதமர்ட்ட அப்படி நிக்குறது ஒரு தப்பா?)

* மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்னாடக முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். (ஹும்! இனிமே பரப்பன சிறையில பிரேக் பாஸ்டுக்கு மட்டன், லஞ்ச்க்கு ஃபிஷ், டின்னருக்கு சிக்கன் டிக்கான்னு கைதிகளுக்கு ஏக தடபுடல்தான் போங்க.)

* ஜெயலலிதா இருக்கும் போது எந்த அமைச்சர் பாட்டுப் பாடினார், நடனம் ஆடினார்? என்று பிரேமலதா போட்டுத் தாக்கியுள்ளார். (அண்ணி, சங்கரங்கோவில் கருப்பசாமியை அம்மா மேடையிலேயே பாடவிட்டு கைதட்டி கலகலன்னு ரசிச்ச அந்த கண்கொள்ளா காட்சியை இப்புடி மறந்துட்டீகளே!)