திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றார். தமிழக சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் புகராக கொடுத்துவிட்டு, நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, அவர் அளித்த பேட்டி:-
டெல்லியில் ஜனாதிபதி தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினேன். அப்போது, சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து புகாராக அளித்தேன். நாங்கள் கொடுத்த புகாரை முழுமையாக படித்து பார்த்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன்.
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றமே ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்துவிட்டது. அவர் மறைந்துவிட்ட காரணத்தால், அபராதம் ரூ.100 கோடி மட்டும் செலுத்த வேண்டும். அவர் உயிருடன் இருந்தால், அவருக்கு சிறை தண்டனை கிடைத்து இருக்கும்.
இவ்வாறு குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா, அரசு சார்பில் எப்படி நடத்தலாம். இந்த விழாவை தமிழக அரசின் சார்பில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என ஒரு பெரிய விழாவாக நடந்துள்ளது. அதைமுதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

ஜெயலலிதா பற்றி நான் குறை கூறவில்லை. ஆனால் உச்சநீதிமன்றமே, ஜெயலலிதாவை குற்றவாளி என உறுதி செய்துள்ள நிலையில், அவரது பெயரில் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளது வேதனையான சம்பவம்.
அரசுக்கு மக்கள் தரக்கூடிய வரிப்பணத்தை எடுத்து, இந்த விழாவுக்காக பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துள்ளார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். இது எந்தவகையில் நியாயம் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். அவர் நேர்மையானவர் என மக்கள் நினைக்கிறார்கள். நாங்களும் அப்டி தான் கருதினோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
