மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைவதற்கு 2 நாட்கள் முன்பு அதிகாரிகளுடன் பேசியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 
ஜெ.வின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் நேற்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் மற்ற சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
அப்போலோ மருத்துவமனையில் ஜெ.விற்கு அளிக்கப்படும் சிகிச்சையை உறுதி செய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை தமிழக அரசு அழைத்தது. அதை, ராம மோகன் ராவ், வெங்கட்ரமணன் ஆகியோர் தெரிவித்தனர். டிச. 3ம் தேதி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெ.வை சந்தித்தனர். 

அப்போது, அவர்களுடன் ஜெயலலிதா 20 நிமிடங்கள் பேசினார். கால் தசைநார் வலுவிழந்து இருந்ததால், அவரால் நிற்க முடியவில்லை. எனவே, நாற்காலியில் அமர்ந்து பேசினார். அன்றைய தினம் அவரின் இதயம் நன்றாக இருந்தது. மருத்துவர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
 
எனவே போயஸ் கார்டன் வீட்டில் தாக்கப்பட்ட பின்பே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்கிற செய்தி முற்றிலும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.