நான் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னித்துவிடுங்கள். என்னை பழைய அக்ரி கிருஷ்ணமூர்த்தியாக பார்க்காதீர்கள். சத்தியமாக இனி அப்படி இருக்க மாட்டேன். இனி வரும் காலங்களில் புதிய அக்ரி கிருஷ்ணமூர்த்தியை பார்ப்பீர்கள்

* பண முதலை வேட்பாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டியது மிக முக்கியம். ராயப்பேட்டை பகுதிகளில் நான் பிரசாரம் செய்தபோது, என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கிறார்கள்: கமீலா நாசர். (நீங்க வின் பண்ணுறீங்களோ, இல்ல பன்னு வாங்குறீங்களோ தெரியாது. ஆனால், அரசியல்வாதி தகுதி உங்களுக்கு அம்சமா வந்துடுச்சு. அதெப்டிங்க இந்த வயசுலேயும் ‘என்னை பிள்ளையா பார்க்கிறாங்க’ன்னு கூசாம பேச முடியுது? நீங்க நாசரை விட பெரிய ஆக்டரா இருப்பீங்க போல இருக்குதே!)

* என் வழக்கின் வெற்றிக்கு காரணம் ஜெயலலிதா தான். என்னோட இழப்பை, பாதிப்பை அம்மாவை நேரில் சந்திச்சு சொன்னேன். அவங்க அமைச்சுக் கொடுத்த டீம்தான் இந்த வெற்றியை உருவாக்கியிருக்குது: ஜீவஜோதி (நீங்களாச்சும் அந்த அம்மாவை மனசுல வெச்சு, நன்றியோட இருக்கீங்களே ஜீவஜோதி! இங்கே பல பேர் இருக்கிறாங்க. அவங்களெல்லாம்....ஹும் என்னத்த சொல்ல!)

* சத்தியமூர்த்தி பவனில் எத்தனையோ வெட்டுக்குத்துக்கள் நடந்திருக்கிறது. அவர்கள் யாரையும் கட்சியை விட்டு நீக்கவில்லையே! காங்கிரஸில் பல கோஷ்டிகள் இருக்குது, இதில் ஏதோ ஒரு கோஷ்டி என்னைப் பற்றி தப்பும் தவறுமாக செய்திகளை பரப்புது: செல்வப்பெருந்தகை. (ஆனா உங்களை மாதிரி பேசுறதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும் தல. சொந்த கட்சியையே ‘வெட்டுக் குத்து நடத்துற கட்சி, பல கோஷ்டிகள் இருக்குற கட்சி’ன்னு வாயார புகழ்றீங்க பாருங்க, செல்வம் நீங்க காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் செல்வம்தானுங்க.)

* நான் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னித்துவிடுங்கள். என்னை பழைய அக்ரி கிருஷ்ணமூர்த்தியாக பார்க்காதீர்கள். சத்தியமாக இனி அப்படி இருக்க மாட்டேன். இனி வரும் காலங்களில் புதிய அக்ரி கிருஷ்ணமூர்த்தியை பார்ப்பீர்கள். எல்லோருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன், பதவி வாங்கி தருவேன்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி. (சரி, பதவிக்காக நீங்களும் வெட்கத்தை விட்டு ஓவரா கண்ணீர் வடிச்சு மன்னிப்பு கேட்டுட்டீங்க, உங்க கட்சிக்காரங்களும் மன்னிச்சுட்டாங்கன்னு வெச்சுக்கோங்க. ஆனால் நீங்க என்னதான் மன்றாடுனாலும், ‘அந்த ஆபீஸரோட ஆத்மா’ உங்களை மன்னிக்குமா மிஸ்டர் அக்ரி?)

* கடந்த முறை தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த வைகோ, திருமா போன்றோர் இப்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கிறார்கள். நாங்கள் சந்தர்ப்பவாத கூட்டணி என்றால், அவர்களும் அப்படித்தானே! ஏன் எங்களை மட்டும் திட்டுறீங்க?: சுதீஷ். (ஆக, இப்ப உங்க பிரச்னை ‘ஏன் என்னை திட்டுறீங்க?’ அப்படிங்கிறதில்லை, ‘என்னை மட்டும் ஏன் திட்டுறீங்க?’ன்னுதான் இல்லையா! நீங்க ஒழுக்கமில்லை, சரியில்லை, அரசியல்ல தப்புதான் பண்றீங்கன்னு ஓப்பனா ஒத்துக்குறீங்க இல்லையா சுதீஷ்!)