முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகப்போவதாக தகவல் வந்துள்ளது. இதை அறிந்ததும், அதிமுகவினர் இன்ப அதிர்ச்சியில் குஷியாகிவிட்டனர்.

கடந்த செப்டம்பர் 22ம் முதலமைச்சர் ஜெயலலிதா,உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டக்டர்கள், சிங்கப்பூர் பிசியோ தெரபி சிகிச்சை பெண் நிபுணர்கள் ஆகியோர் 58வது நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு வீட்டு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கப்படுகிறது. அவரும், அதனை விரும்பி சாப்பிட்டு வருகிறார். பெரும்பாலும் இயற்கையாகவே சுவாசித்து வருகிறார். அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளை பார்த்து, நாட்டு நிலவரங்களையும், மக்களின் நிலையையும் அறிந்து வருகிறார் என ஏற்கனவே டாக்டர்கள் கூறிவந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆக இருப்பதாக திடீர் தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர். தற்போது, அவர் வீட்டு உணவு சாப்பிடுகிறார். உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்வதை அவரே முடிவு செய்வார் என ஏற்கனவே டாக்டர்கள் கூறியிருந்தார். தற்போது, எங்களுக்கு இன்றுமாலை 5 மணிக்கு டிஸ்சாஜ் ஆக இருப்பதாக தெரியவந்தது. இதனால், நாங்கள் அதிக சந்தோஷத்தில் இருக்கிறோம். நாங்கள் வணங்கிய தெய்வம் எங்களை கைவிடவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி பார்க்க ஆசை பட்டோம். அது இன்று நிறைவேறுகிறது என்றார்.