ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியும் செல்லாத நிலையில் அந்தத் துறையின் செயலாளர் மீது சக அமைச்சர் குற்றம் சுமத்தி பேசியிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் நேற்று அளித்த பேட்டி அரசியல்வாதிகள், அமைச்சர்களைவிட அதிகாரிகளை சற்று கலங்கடித்துள்ளது. இதுநாள் வரை சசிகலா மீதும், சசிகலா குடும்பத்தினர் மீதும் சந்தேகம் தெரிவித்து வந்த நிலையில், அதிகாரிகள் மீதும் அது பாய்ந்திருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையத்தில் எதிர் மனுதாரராக சசிகலா சேர்க்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவையும், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனையும் எதிர் மனுதாரராக சேர்க்க ஆணையத்தின் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனை தர்மசங்கடமாக்கும் வகையில் சிவி சண்முகத்தின் பேட்டியும் அமைந்தது. சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் ஒரு மருத்துவர். ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது பணிகள் என்னவாக இருந்தது என்பது பற்றிய கேள்விகூட சிவி சண்முகம் எழுப்பவில்லை.  1984-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். இதே அப்பலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அன்றைய சுகாதார துறை அமைச்சரும் மருத்துவருமான ஹண்டே மேற்பார்வையில் சிகிச்சை நடந்தது. 

எம்.ஜி.ஆர். உடல்நலம் குறித்து அரசு சார்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டன. பத்திரிகையாளர்களை ஹண்டே சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, இப்படி எதுவும் நடக்கவில்லை. முதலில் சுகாதாரத் துறை அமைச்சரை கேள்விக்குள்ளாக்க வேண்டியதை விட்டுவிட்டு அவருக்குக் கீழ் பணியாற்றி அதிகாரி மீது பாய்ந்திருப்பதுதான் அதிகாரிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜெயலலிதா சிகிச்சையின்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போலோவுக்கு தினமும் வந்து சென்றிருக்கிறார். ஜெயலலிதா உடல்நலம் குறித்த தகவல் பரிமாற்றங்கள் அவருடன் மேற்கொள்ளப்பட்டதா, சசிகலாவுடன் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இதேபோல அன்று பொறுப்புகளை கவனித்துக்கொண்ட ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கரை தாண்டி சுகாதாரத் துறை அதிகாரியான ராதாகிருஷ்ணனுடன் அப்போலோ மருத்துவர்கள் தகவல் பரிமாற்றம் செய்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் கூற வேண்டும். இதற்கெல்லாம் ஆணைய விசாரணை முடிவில் விடை கிடைக்குமா என்றும் தெரியவில்லை. 

ஆணையத்தில் ஆஜராகும்படி அமைச்சர் விஜய பாஸ்கருக்கு இரண்டுமுறை சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. அவர் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கமும் அளிக்கவில்லை. அவர் சார்பில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யவில்லை. ஓ. பன்னீர்செல்வமும் இன்னும் ஆஜராகவில்லை. இந்தச் சூழ்நிலையில் அதிகாரி மீது அமைச்சர் பாய்ந்திருப்பதை அதிகாரிகள் தரப்பு அதிர்ச்சியுடன் பார்க்கிறது. 

இதுபற்றி விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் கருத்து சொல்ல மறுத்துவிட்டதையும், இன்னொரு அமைச்சர் ஜெயக்குமார், அதை வரவேற்றிருப்பதையும் அதிகாரிகள் தரப்பு ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. அமைச்சரவையிலோ முதல்வருடனோ தனியாகப் பேசி தெரிவித்திருக்க வேண்டிய கருத்தை, பத்திரிகையாளர்கள் முன்பு பேசி, விஷயத்தைப் பூதாகரமாக்கியதையும் அதிகாரிகள் தரப்பு விரும்பவில்லை.