jayalalitha death inquiry cage form

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க சென்னை எழிலகத்தில் விசாரணை ஆணையம் சார்பில் விசாரணை கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் மருத்துவர் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு என சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும்கூட 75 நாட்கள் சிகிச்சைப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்.

இதையடுத்து, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கட்சியிலிருந்து தனித்து செயல்பட்ட ஓபிஎஸ் அணியினரும் எதிர்க்கட்சிகளும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் இறந்ததுவரை விரிவான விசாரணையை இந்த ஆணையம் நடத்த உள்ளது. 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் தகவல் அறிந்தவர்களும் நேரடி தொடர்புடையவர்களும் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை பிரமாணப்பத்திரங்களாக வரும் 22-ம் தேதிக்குள் விசாரணை ஆணையத்திற்கு அனுப்புமாறு விசாரணை ஆணையம் கேட்டுக்கொண்டது.

அதன்படி, 8 பிரமாணப் பத்திரங்கள் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 70-க்கும் மேற்பட்ட கடிதங்களும் விசாரணை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையத்திற்கு உதவுவதற்காக மருத்துவ குழு அமைக்கும் பணியும் நடந்துவருகிறது.

வரும் 22-ம் தேதி முதல் விசாரணை தொடங்கப்படும் என ஆறுமுக சாமி தெரிவித்திருந்தார். அதன்படி, இதுவரை பெறப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், அவற்றை தாக்கல் செய்தவர்களையும் மேலும் இதுதொடர்பாக பதவியில் இருக்கும் பலரிடமும் நேரில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அதற்காக, சென்னை எழிலகத்தில் உள்ள கலச மஹாலில், நீதிமன்றத்தில் உள்ளதைப்போல விசாரணைக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.