உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தான் நேரில் பார்த்தேன் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணன் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அன்று உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா உள்ளிட்ட சிலர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக அணிகளாக பிளவடைந்தன. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என அதிகமுக அணிகளாக பிரிந்தது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைவதற்கு, ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதன் அடிப்படைடியல், முன்னாள் நீதிபதி
ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 

சென்னை, எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணைக் கமிஷனில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடந்து வருகிறது முன்னாள் அதிகாரிகள், இந்நாள் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், அப்போலோ
மருத்துவமனை நிர்வாகம் என அவரது மரணத்தில் தொடர்புடைய அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இதுவரை ஆணையத்தில் விளக்கம் அளித்த அனைவரது பதிலும் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கண்ணன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5-வது நாள் ஜெயலலிதாவை பார்த்ததாக கண்ணன் ஆறுமுகசாமி விசாரணை அளித்துள்ளார்.

இதன் பின் கார் ஓட்டுநர் கண்ணன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது காரில் பின்னால் சென்றதாக கூறினார். தான் 1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக
பணியாற்றுவதாகவும் கண்ணன் அப்போது கூறினார்.