Asianet News TamilAsianet News Tamil

ஓ.பி.எஸ் மனைவிக்காக தேடியது முருகன் திருவடிகளில்.. அர்த்தம் புரியாத ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..!

கழக ஒருங்கிணைப்பாளர்  இல்லத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக புறப்பட்டோம். மதுரையிலிருந்து செல்லும் வழியில் பூக்கடைகள் நிறைய இருந்தன. கடைக்கு சென்று மனோரஞ்சிதம் கிடைக்குமா? என்றேன். இங்கு கிடைக்காது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு சென்றால் கிடைக்கும் என்றார்கள். 

jayalalitha assistant poongundran sankaralingam Facebook post
Author
Tamil Nadu, First Published Sep 18, 2021, 6:05 PM IST

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி அம்மா அவர்களுக்கு நான் தேடிய பூக்கள் முருகனின் திருவடிகளில் சேர்ந்ததன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை என ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளரான பூங்குன்றன் அவரது முகநூல் பக்கத்தில்;- கழக ஒருங்கிணைப்பாளர்  இல்லத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக புறப்பட்டோம். மதுரையிலிருந்து செல்லும் வழியில் பூக்கடைகள் நிறைய இருந்தன. கடைக்கு சென்று மனோரஞ்சிதம் கிடைக்குமா? என்றேன். இங்கு கிடைக்காது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு சென்றால் கிடைக்கும் என்றார்கள். பன்னீர் ரோஜாக்கள் கிடைக்குமா? என்றேன். அதுவும் இங்கு கிடைக்காது என்றார்கள். மாட்டுத்தாவணியை நாம் கடந்து வந்துவிட்டோம் என்று நண்பர் சொன்னார். சரி போகிற வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்று புறப்பட்டோம். நண்பர் மனோரஞ்சிதம் குறித்து கேட்ட போது, மன்னிக்கவும் நான் செண்பகப்பூவுக்கு பதிலாக மனோரஞ்சித பூவின் பெயரைச் சொல்லிவிட்டேன் என்றேன்.

jayalalitha assistant poongundran sankaralingam Facebook post

தேனியில் இருக்கும் நண்பரிடம் சொல்லி தேனியில் செண்பகப்பூ கிடைக்குமா? என்று விசாரித்தோம். அங்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்தோம். பயணித்த வழியில் பெண்கள் பூ விற்று கொண்டிருந்தனர். மல்லிகை பூவையாவது வாங்கிக் கொள்ளலாம் என்று வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். எதிரே ஒரு பெண் பை நிறைய மல்லிகையை எடுத்துச் சென்றார். நான் நண்பரிடம் அந்த மல்லிகையை காண்பித்து இப்படி இருந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன். நான் கை காட்டியதை பார்த்த அந்தப் பெண் பூ வேண்டுமா? என்று கேட்டு, அருகில் வந்து விலை சொன்னார். ஒரு சிறிய பையில் வேறு பூ வைத்திருந்தார். இது என்ன? என்றேன். பிச்சி பூ என்றார். அதுவும் சிறப்பான மலர் என்பதால், பிச்சிப்பூ முழுவதையும், கொஞ்சம் மல்லிகையையும் சேர்த்து வாங்கிக் கொண்டோம்.
 
பயணம் தொடர்ந்தது. ஒரு பேருந்து நிலையத்தின் வழியாகச் சென்ற போது திடுக்கென்று விழித்த நான் பன்னீர் ரோஜாக்கள் இருப்பதைக் கண்டு நண்பரிடம் சொன்னேன். அவரும் சென்று வாங்கி வந்தார். மனம் ஓரளவு திருப்தி பெற்றது. நண்பர்களுக்கும் சந்தோஷம். பெரியகுளம் சென்றோம். விஜயலட்சுமி அம்மாள் அவர்கள் திருவுருவப்படத்திற்கு மல்லிகை மலர் அஞ்சலி செலுத்தினோம். துயரத்தில் பங்கு கொண்டு திரும்பி வருகின்ற வழியில், பழனி அருகில் இருக்கிறது என்றார் ஓட்டுநர். அப்போது மணி மூன்றைத் தொட்டிருந்தது. பிள்ளையார்பட்டி சென்று கொண்டிருந்த நாங்கள் முருகனின் ராஜ அலங்கார தரிசனத்தை பார்ப்போம் என்று சொல்லி பழனிக்குச் சென்றோம். 

jayalalitha assistant poongundran sankaralingam Facebook post

தம்பி முரளி சிவம் வந்தார். புதுத் துணிகளை வாங்கித் தந்தார். நீராடிவிட்டு, அவரோடு முருகனை தரிசிக்க சென்றோம். ரோப் காரில் பயணிப்பதற்காக நின்று கொண்டு இருந்தோம். அப்போது பக்கத்தில் இருந்த செடியை காண்பித்து இது அலிஞ்சியா? என்று கேட்டேன். இல்லை மனோரஞ்சிதம் என்றார் அழகர். பக்கத்தில் நின்ற பாலகுரு செடியில் தேடி இரண்டு மனோரஞ்சிதப் பூக்களை பறித்து கொடுத்தார். பச்சை நிறத்தில் இருக்கும் இந்த மலர் மஞ்சள் நிறமாக மாறும் போது மிகுந்த வாசனை வரும் என்று சொல்லி, விடாமல் தேடி கடைசியில் ஒரு பெரிய மனோரஞ்சித பூவை பறித்து வந்து கொடுத்தார். மஞ்சள் நிற பூவில் அப்படி ஒரு தெய்வீக மணம். நான் இறைவனை நினைத்து முரளி சிவத்திடம் கொடுத்தேன். அவரோ கையில் வைத்து நன்றாக வேண்டிக்கொண்டு சன்னதியில் வந்து கொடுங்கள் என்றார். நாங்களும் மலையில் முருகன் திருப்பாதத்தை தரிசனம் செய்து, முருகனை காணச் சென்றோம். 

jayalalitha assistant poongundran sankaralingam Facebook post

முருகப் பெருமானை காண செல்லும் வாசலில் அம்மா மீது மிகுந்த பக்தி கொண்ட ஒரு நல் உள்ளம் என்னைச் சந்தித்தது. அம்மாவைப் பார்த்தால் காண்பிக்கும் அன்பை என்னிடம் கொட்டினார் சிவா! அவரின் அம்மா பாசத்திற்கு முன்னால் என் பாசம் எல்லாம் சும்மா! எனத் தோன்றியது. உற்சாகத்தில் பேசிய அவர் டப்பாவில் வைத்திருந்த  செண்பகப்பூக்களை என்னிடம் கொடுத்து முருகனிடம் சேர்க்கச் சொன்னார். எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கும் ஆச்சரியம். நான் தேடிய செண்பகம் தவறுதலாக சொன்ன மனோரஞ்சிதம் இரண்டும் இப்போது என் கைகளுக்குள் உறவாடிக் கொண்டிருந்தன. இரண்டையும் இணைத்து முரளி சிவத்திடம் கொடுத்தேன். முருகன் திருப்பாதங்களை சேர்ந்தன அந்த தெய்வீக மலர்கள். தாயார் விஜயலட்சுமி அம்மா அவர்களுக்கு நான் தேடிய பூக்கள் முருகனின் திருவடிகளில் சேர்ந்ததன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios