Jayalaitha picture in assembly highr court dismiss the petition

ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைப்பது தார்மீக அடிப்படையில் பார்த்தால் தவறுதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா புகைப்படத்தை அகற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,தனது தீர்ப்பில் இந்த கருத்தையும் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவ படம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப் பட்டது. இதை எதிர்த்து திமுக சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை பேரவையில் வைப்பது சட்டவிரோதம். சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனபாலுக்கு பேரவைத் தலைவர் பதவி வழங்கியதால் அதற்கான விசுவாசத்தை காட்டும் வகையில், ஜெயலலிதா படத்தை விதிகளை மீறி பேரவைத் தலைவர் திறந்துவைத்துள்ளார். எனவே, அந்தப் படத்தை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, பேரவைத் தலைவரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.ஆனால் ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைப்பது தார்மீக அடிப்படையில் பார்த்தால் தவறுதான் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.