குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக . தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பேரணி சென்னையில் திங்கட் கிழமை  நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு திரையுலகினர், வணிகர்கள், மாணவ அமைப்பினர் உள்பட 98 அமைப்புகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளார். குறிப்பாக நடிகர் – நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரணியில் ஒரு லட்சம் பேரை திரட்டுவதற்கு தி.மு.க. திட்டமிட்டுள்ளது. எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே தொடங்கும் பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையும் என்று சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற  விழா  ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அதிமுக கட்சி கொடியிலேயே அண்ணாவை வைத்துள்ளதாகவும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தாங்கள்  ஆட்சி நடத்துவதாகவும்  தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது என கூறி பெரிதாக சிரித்தார்.