jayakumar pressmeet about stalin
டெல்லியில் 15-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்றார்.
ஜி.எஸ்.டி. கூட்டத்திற்குப் பிறகு நிதியமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, கையால் செய்யப்பட்ட நகைகள், வெட் கிரைண்டருக்கு வரியை குறைக்க வலியுறுத்தியதாக கூறினார். டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரியை குறைக்கவும் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரவித்தார். ஜவுளிகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் வரியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி. வரியை நிறைவேற்றும் தேதி குறித்து பேரவை சபாநாயகர் முடிவு செய்வார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சானிட்டரி நாப்கினுக்கு முற்றிலும் வரியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்கள், மறு சுழற்சி செய்யும் பொருட்களுக்கு ஜி.எஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அம்மாவுடைய அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என்றார்.
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க மு.க.ஸ்டாலின் கூறுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், மு.க.ஸ்டாலின் கூறுவது சுயநலமே என்று கூறினார். அதிமுகவின் 122 எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என்றார். தமிழக அரசு மக்கள் பாராட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழகத்தில் ஆட்சி நீடிக்குமா வேண்டாமா என்பதை மு.க.ஸ்டாலின் தீர்மானிக்க முடியாது என்றும், ஆட்சி நீடிக்கவா, வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், தான், ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இருந்ததாகவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து எதுவும் தெரியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
