jayakumar pressmeet

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகவே உள்ளோம் என்றும் இரட்டை இலை சின்னம் நிச்சயம் எங்களுக்கே கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

அணிகள் இணைப்பு நடந்தாலும், மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் டுவிட்டரில் பதிவிட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மைத்ரேயன் கருத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதே வேளையில் எந்த பிரச்சனை என்றாலும் கட்சிக்குள் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர பொது வெளியில் அல்ல என்றார்.

எடப்பாடி பழனிசாமி அரசு 25 அல்லது 26 ஆம் தேதி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரும் என்றும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் எம்.ஜி.ஆர். பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், 

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவருக்கு நமது எம்ஜிஆர் பத்திரிகை நாடித் துடிப்பாகவும், ஜெயா டிவி இதயமாகவும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது எம்ஜிஆர் பத்திரிகை முரசொலியாகவும், ஜெயா டி.வி. கலைஞர் டி.வி.யாகவும் மாறிவிட்டன என்று கூறினார். துரைமுருகனின் பேட்டி ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டதில் இருந்தே திமுகவுடன் அவர்கள் எந்த அளவு கூட்டணி வைத்துள்ளனர் என்பதை அறிந்து
கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.