தைரியம் இருந்தால், நடிகர் கமல் அரசியலுக்கு வரட்டும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 மாதத்துக்கு முன், திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகர் கமல், தமிழக அரசில் சிஸ்டம் சரியில்லை என கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், பேய் மற்றும் ஆவியை தெர்மாக்கோலை கொண்டு கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்தார். இதனால், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை கடுமையாக கமலை சாடி வந்தனர்.

இதோபோன்று நடிகர் கமல், தொடர்ந்து, கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு பதிலாக அமைச்சர்களும் பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “நடிகர் கமல், பல கருத்துக்களை கூறி வருகிறார். அவருக்கு, திமுக ஆதரவு கொடுத்து வருகிறது. ஆதரவளிக்கும் கட்டாயத்தில் திமுக தள்ளப்பட்டுள்ளது.

கமலுக்கு தைரியம் இருந்தால், அரசியலுக்கு வரட்டும். அரசியலுக்கு வந்த பின்னர் அவர், எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். நாங்கள் பதில் அளிக்கிறோம். கமல் கூறும் கருத்துக்களுக்கு, அமைச்சர்கள் பதில் மட்டுமே கூறி வருகின்றனர்” என்றார்.