ஆடியோ விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்தான், அதனை நிரூபிக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் கவர்னர் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணையும், குழந்தையும், குடும்பத்தையும் ஜெயக்குமாரிடம் இருந்து உயிரோடு காப்பாற்ற வேண்டும் என்றும் வெற்றிவேல் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை பெசன்ட் நகரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடியுங்கள். வீட்டு விலாசம் இருக்கு. பெர்த் சர்ட்டிபிகேட் இருக்கு. அங்க போய் செக் பண்ணுங்க. டி.என்.ஏ. சோதனை செய்யுங்க. குற்றம் சுமத்தும்போது அவர்தான் அதனை நிரூபிக்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ குறித்த விசாரணைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும். எதைப்பற்றியும் பயம் இல்லாததால் நாங்கள் சொல்கிறோம். 

குழந்தைக்கோ, பெண்ணுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் அவர்களுக்கு துணையாக இருப்போம். அமைச்சர் ஜெயக்குமார் பற்றி வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எத்தனை பெண்களிடம் தவறிழைத்துள்ளார் என்ற லிஸ்டே எங்களிடம் உள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகிவிட்டால் சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுப்பார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது, அரவக்குறிச்சியில் இவர் ரூம் போட்டிருக்கிறார். அந்த பெண்ணிடம் கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார். 

சம்பந்தப்பட்ட பெண் என்னுடைய பாதுகாப்பில் இல்லை. அவர்கள் சொந்த வீட்டில் உள்ளார்கள். பெண்கள் விஷயத்தில் கறாராக இருந்தவர் ஜெயலலிதா. அம்மாவின் ஆட்சி என்று சொல்லும் தற்போதைய ஆட்சியில் அது போன்று பலர் உள்ளனர். அவர்கள் பற்றி சொல்ல மாட்டேன். இதை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. அபலை பெண்ணுக்கு குரல் கொடுப்பதற்காக உண்மையைச் சொல்கிறேன்.

மாஃபியா கும்பலில் இல்லை; மாமியார் கும்பலில் மாட்டியுள்ளார். தேவைப்படும்போது அனைத்து ஆதாரங்களும் வெளியிடப்படும். ஆடியோவில் உள்ள குரல் அவருடையது இல்லை என்கிறாரே? குழந்தை அவருடையது இல்லை என்கிறாரா? மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதித்திருந்தபோது, நாங்கள் எல்லாம் கவலையில் இருந்தபோதே இவர் இந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

ஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் விபரீதமாகிவிடும். பெண் நிருபர்கள், தொகுதியில் இருக்கும் பெண்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த விஷயத்தில் கவர்னர் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுத்து அந்த பெண்ணையும், குழந்தையும், குடும்பத்தையும் ஜெயக்குமாரிடம் இருந்து உயிரோடு காப்பாற்ற வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மேதகு ஆளுநரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.