நமது எம்ஜிஆர் நாளிதழ் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பார் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொது செயலாளரான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கிலும், டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் சிறை சென்றனர்.

பிளவு பட்ட அதிமுக அணிகளை இணைப்பதற்கான முயற்சியில், சசிகலா மற்றும் டிடிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஜாமினில் வெளி வந்து மீண்டும் கட்சி பணியில் ஈடுபடப் போவதாக கூறினார்.

சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதனால், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். 

எடப்பாடி பழனிசாமி, ஆட்சியைப் பார்த்துக்கொள்ளட்டும்; தினகரன் கட்சியை வழி நடத்தட்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். 

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த புகைப்படம், செய்திகள் ஆகியவை நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதைதொடர்ந்து, நேற்று பேசிய நாஞ்சில் சம்பத் அதிமுக நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செய்திகள் புறக்கணிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  எடப்பாடி பழனிசாமியின் செய்திகள்நமது எம்ஜிஆர் நாளிதழில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பார் முதல்வர் எனவும் தெரிவித்தார்.