Asianet News TamilAsianet News Tamil

அணிகள் இணைப்பை தடுக்கும் ஜெயக்குமார் - தம்பிதுரை... தாமதமாக சுதாரித்து தவிக்கும் எடப்பாடி!

jayakumar and Thambidurai against two team
jayakumar and-thambidurai-against-two-team
Author
First Published Apr 25, 2017, 12:15 PM IST


அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன ஆனால், எடப்பாடி அணிக்குள்ளேயே, தினகரன் கோஷ்டி ஒன்று தீவிரமாக  இயங்கி வருவது, முதல்வருக்கே தாமதமாகத்தான் தெரிந்துள்ளது. 

அந்த கோஷ்டியே, எதை எதையோ தேவை இல்லாமல் பேசி,  அணிகள் இணைப்புக்கு முட்டுகட்டை போட்டு வருவது தற்போதுதான்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், கூடவே இருந்து கொண்டு தினகரனுக்கு ஆதரவாக செயல் படுவதை முதல்வர் எடப்பாடி உணர தொடங்கி விட்டார்.

jayakumar and-thambidurai-against-two-team

அணிகள் இணைப்பது குறித்த பேச்சு எழுந்த போதே, தினகரனையும், சசிகலா குடும்பத்தையும் ஒதுக்குவதாக அமைச்சர்கள் அறிவித்திருப்பது, தங்களது தர்ம யுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று பன்னீர் கூறி இருந்தார்.

அதற்கு, விட்டால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெற்றிக்கும், தாமே  காரணம் என்று பன்னீர் சொன்னாலும் சொல்வார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேலியாக பதில் கூறி இருந்தார்.

அதேபோல், பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்பே, அணிகள் இணைப்பு முடிந்தாலும், எடப்பாடிதான் முதல்வராக தொடருவார் என்று, தம்பிதுரை தாமாகவே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

இந்த இரண்டு பேட்டியும், பன்னீர் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. 

சசிகலா குடும்ப உறவுகள் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்ற இரண்டு நிபந்தனையே, பன்னீர் தரப்பின் முக்கிய நிபந்தனையாக  உள்ளது.

ஆனால், பன்னீர் பதவி ஆசை பிடித்தவர், முதல்வர் பதவிக்காக அலைகிறார் என்று மக்கள் மத்தியில், பன்னீரை ஒரு பதவி ஆசை பிடித்தவர் என்று சித்தரித்து, அவரது செல்வாக்கை சரிய வைக்க வேண்டும் என்பதே தினகரனின் திட்டம்.

jayakumar and-thambidurai-against-two-team

அத்துடன், இரு அணிகளும், எக்காரணம் கொண்டு  இணைந்து விட கூடாது என்பதிலும் தினகரன் உறுதியாக இருக்கிறார். அதை செயல்படுத்தும் பொறுப்பு ஜெயக்குமார் மற்றும் தம்பிதுரையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே, அணிகள் இணைப்புக்காக, தன்னுடைய நிதி அமைச்சர் பதவி, நிர்வாகத்துறை ஆகியவற்றையும் பன்னீருக்கு விட்டுக் கொடுக்க தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டி மூலம்,  பன்னீரின் பதவி ஆசை காரணமாகவே, அணிகள் இணைப்பு தள்ளி போகிறது என்றே  ஒரு தோற்றத்தை  உருவாக்குவதே அவருடைய நோக்கம்.

ஆனால், அதை தெளிவாக அறிந்து கொண்ட  கே.பி.முனுசாமி, அணிகள் இணைப்பு பற்றி பேசும் அமைச்சர்களுக்கு பின்னால், யாரோ இருந்து ஆட்டிவைக்கின்றனர் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்தார்.

இந்த சூழ்ச்சிகளை எல்லாம் தாமதமாக  அறிந்து கொண்ட முதல்வர் எடப்பாடி, கூட இருந்தே குழி பறிக்கும் இவர்களை வைத்து கொண்டு, எப்படி இரு அணிகளையும் இணைப்பது என்று கவலையில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios