Jail Only My favorite Place vaiko says

கடந்த 2009 ஆம் ஆண்டு நான் குற்றஞ்சாட்டுகிறேன் நூல் வெளியீட்டு விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மூன்றாம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேசத் துரோக வழக்கை விரைந்து முடியுங்கள், அல்லது சிறைக்குச் செல்கிறேன் என்று வைகோ தெரிவித்தார். இதனையடுத்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரண்டு முறை இவ்வழக்கில் ஜாமீனில் செல்லும்படி நீதிமன்றமே வலியுறுத்தியும் விடுதலை ஆவதற்கு வைகோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்தச் சூழலில் 51 நாட்கள் சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் அளிக்கும் படி வைகோ தரப்பில் திடீரென பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த 4 ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன், எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், சொந்த ஜாமீனில் வெளியே செல்ல அனுமதி வழங்கினார்.

இதற்கிடையே ஜாமீன் பெற்று விடுதலையானதும், வைகோ செய்தியாளர்களைச் சந்தித்சார். அப்போது பேசிய அவர், "எனக்கு ரொம்ப பிடிச்ச இடமே சிறைச்சாலை தான். அங்கு தான் எனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. செய்தித் தாள்கள், புத்தகங்கள் படிக்கலாம். எழுதலாம். சிறையில் இருந்து நிர்வாகிகளுக்கு 1500 கடிதம் எழுதி இருக்கிறேன். அடுத்து இயக்கத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்வதற்கு, என்ன செய்யலாம் என்பதற்கு இந்த சிறைவாசம் பயன்பட்டது. ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிறையில் இருந்து வெளியே வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை"இவ்வாறு வைகோ தெரிவித்தார்.