Asianet News TamilAsianet News Tamil

ஜெ. மரண மர்மம்: அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை!

J. Death mystery to file a case against ministers
J. Death mystery: to file a case against ministers
Author
First Published Sep 24, 2017, 11:25 AM IST


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்த்ததாகவும், இட்லி-சட்னி சாப்பிட்டதாக கூறியதெல்லாம் பொய் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு,  ஜெயலலிதாவின் மரணத்தில் ஆயிரம் மர்மங்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள கருத்துக்கள் ஜெயலலிதாவின் மரணத்தில் அவருக்குள்ள தொடர்பு பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை ஆராய்ந்து பார்த்தால், ஜெயலலிதா சாவுக்கு துணை போயிருப்பதாக எண்ணத்தோன்றுகிறது என்றும், ஜெ.வை யாராவது சந்தித்தால் தாம் எவ்வாறு கொல்லப்படுகிறேன் என்பதை அவர்களிடம் கூறிவிடுவார் என்ற அச்சத்தில்தான் அவரை யாரும் சந்திக்க விடாமல் சசிகலா குடும்பத்தினர் தடுத்து விட்டனர் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இது உண்மை என்றால் அது குறித்து அப்போதே காவல்துறை கவனத்துக்கு சென்றிருக்க வேண்டும் என்றும், அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் அக்கடமையை உடனே செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை சசிகலா தான் கொன்றதாக இப்போது கூறும் திண்டுக்கல் சீனிவாசன், தமக்கு அமைச்சர் மற்றும் பொருளாளர் பதவிகளை பெற்றுக் கொண்டு, அந்த உண்மைகளை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்தார் என்றால், அது ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு துணை போகும் பெருங்குற்றம் தானே? இந்த குற்றத்திற்கான தண்டனை என்ன? என்றும் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும்தான் பொய்யான தகவல்களை கொடுத்தார் என்று கூற முடியாது.  அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் இதே தகவல்களைக் கூறியுள்ளனர். 

எனவே ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் அமைச்சர்களையும் சேர்த்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணத்துக்கு துணை போன திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios