திமுகவில் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் வாரிசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை மாற்றிக்காட்ட முயன்றவர் மறைந்த ஜெ.அன்பழகன். 

தன் மகன் ராஜா அன்பழகனுக்கு எந்த பொறுப்பும் கொடுக்க அனுமதிக்காதவர். 3 முறை சட்டமன்ற உறுப்பினர். 15 ஆண்டுகளாக திமுக மாவட்டச்செயலாளராக பதவி வகித்தவர். தனது 62வது பிறந்தநாளை குடும்பத்தோடும் கழகத்தினரோடும் கொண்டாடும் இந்நாளில் அவர்  கொரோனாவின் தாக்கத்தால் இறப்பை சந்தித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியான முதல் சட்டமன்ற உறுப்பினர்.
  
மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் தனது கட்சியின் நிலைப்பாட்டில் சமரசமின்றி குரல் கொடுத்தவர் திரு. அன்பழகன்.  கட்சிக்குள்ளும் தன் கருத்துக்களை அழுத்தமாக பேசியவர். 1985ம் ஆண்டு, திமுகவின் தியாகராய நகர் பகுதிச் செயலாளராக இருந்த அன்பழகனின் தந்தை ஜெயராமன் உயிரிழந்ததையடுத்து, பகுதிச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1995ம் ஆண்டு கல்லீரலில் கோளாறு ஏற்பட, லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் இருந்து மீண்டு வந்தவர் 2001 சட்டமன்ற தேர்தலில் அப்போதைய தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக நேருக்கு நேர் விவாதங்களில் பங்கெடுத்தார். 2001ல் அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வுக்கு எதிராக மறியல் போராட்டத்தை அறிவித்த ஜெ.அன்பழகனை போலீசார் கைது செய்தனர். அப்போது அன்பழகனை விடுவிக்கக் கோரி எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு அமர்ந்து திமுக தலைவர் கருணாநிதியே மறியலில் ஈடுபட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. பிரச்சார வியூகர் பிரஷாந்த் கிஷோர் திமுகவில் ஆதிக்கம் செலுத்துவதை கடுமையாக எதிர்த்தவர்.