பொதுவாக, மிதமிஞ்சிய வருமானம் பார்ப்பவர்கள், கருப்புப் பண முதலைகள் எல்லாம், தங்களுக்கு நம்பகமான கார் டிரைவர்கள், உதவியாளர்களையே பினாமியாக வைத்து, சொத்துகளைச் சேர்த்து தாங்கள் கையாள்வார்கள். அதனால்தான் அண்மைக் காலமாக வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் அல்லது வருமான வரித் துறை சோதனைகளுக்கு உட்பட்ட பிரபலங்களின் கார் டிரைவர்கள் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இவை பல சந்தேகங்களைக் கிளப்பி, மேலும் மேலும் சோதனைகளுக்கு அவர்கள் சார்ந்த பிரபலங்களிடம் விசாரணைக்கு வழி வகுத்துவிடுகிறது. 

அண்மையில் கொடநாடு எஸ்டேட் தொடர்பில் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர் என்பதையும், அவர்களைக் கொன்ற கொலையாளிகளை அடையாளம் காண இயலாமல் போலீஸார் தவித்து வருவதையும் நாம் அறிவோம்.

இந்நிலையில், இப்போதையை புது டிரெண்டாக,  டிரைவர், பி.ஏ.க்கள்லாம் பினாமியாக இருப்பது அண்மைக் காலமாக குறைந்து கொண்டே வருகிறதாம். குறிப்பாக, சசிகலா விவகாரத்தில், பெரிய அளவில் ஐ.டி. சோதனைகள் நடத்தப் பட்டன. சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப் பட்ட சோதனைகளில் போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால், எப்படி எவ்வாறு செய்திருக்கிறார்கள், என்பதுதான் புரியாத புதிராக உள்ளது, ஐடி அதிகாரிகளுக்கு! 

அண்மையில் பெரிய அளவில் சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகளில் அலுவலகங்களில் சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் எல்லாமே, அண்மையில் கண்டறியப் பட்ட ஷெல் கம்பெனீஸ் எனப்படும் போலி நிறுவனங்களைக் கண்டறிந்ததன் அடிப்படையில் நடத்தப்பட்டவைதான்.. ஆனால், இந்தப் போலி நிறுவனங்கள் மற்றும் கண்டறியப் பட்ட ஆவணங்களின் அடிப்படையில், பினாமிகளாக நியமிக்கப்பட்ட பலரின் பின்னணி என்ன என்பது குறித்து கண்டறிய இயலாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.  

கார் ஓட்டுநர்கள், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள் பினாமிகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது என்று தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.  

சசிகலா தொடர்புடையவர்களின் அலுவலகங்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனகள் குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவின் பினாமிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவின் பினாமியாக வெளியாட்கள் இருப்பதால் தற்போதைய சூழலில், அவர்களைக் கண்டறிவது சிக்கலாக உள்ளது. கார் ஓட்டுநர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள் பினாமிகளாக இருந்தது போய், இப்போது முகம் கண்டறிய இயலாத யாரையெல்லாமோ பினாமிகளாக வைத்துக் கொள்கின்றனர். இதனால்,  பினாமிகள் யார் என்பதை உறுதிபடுத்த விரிவான விசாரணை தேவைப்படுகிறது.  கைப்பற்றப்பட்ட சொத்துக்களை அடிப்படையாக வைத்து பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்று ஆலோசிக்கப் பட்டு வருகிறது.  

இந்த அதிரடி சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ 7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று வருமான வரித் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதுதான் புரிகிறது, உங்களால் எதுவும் கண்டு பிடிக்க முடியாது, முடிந்தால் கண்டு பிடித்துப் பாருங்கள் என்று டிடிவி தினகரன் விட்ட சவாலின் பின்னணி!