எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டேன் என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட சென்னை பகுதி மக்களுக்கு திமுகவின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.சிறிது நேரம் பொருட்கள் வழங்கிக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால், சற்று தள்ளிச் சென்று பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தில் நின்றார். அவரது அருகில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ ரங்கநாதன் ஆகியோர் இருந்தனர்.

இதனையடுத்து, உடனே அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதனால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், உடனே திமுக தலைமை முற்றிலும் இது வதந்தி என மறுத்திருந்தது. 

இந்நிலையில், கொளத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின்;- எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை செய்யப்பட்டது. மற்றபடி எதும் இல்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.