திமுக அரசுக்கு நெருக்கடி.? இன்று டெல்லி பறக்கும் ஆளுநர் ரவி..! உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்.?
திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், ஆளுநர் ரவி 4 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்லவுள்ளார். அங்கு தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவும் தமிழக ஆளுநரும்
தமிழக ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. அவர் பதவியேற்றதில் இருந்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். நீட் விலக்கு மசோதாவில் ஆரம்பித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டு மசோதாவிற்கு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தியது தமிழக அரசை மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையவைத்தது. தமிழ்நாட்டை தமிழகம் என்ற மாற்ற முயற்சி, அரசு விழாக்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் வெளிப்படுத்தவது என தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பாஜக மற்றும் அதிமுகவின் புகாரையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் தமிழக அரிசிடம் கூறியது மோதல் போக்கை உச்சத்தை அடையவைத்தது.
இலாக்கா இல்லாத அமைச்சர்
ஆனால் அரசு நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடக்கூடாது என பதில் கடிதம் அளித்து ஆளுநருக்கு முதலமைச்சர் அதிர்ச்சி கொடுத்தார். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், அமைச்சராக அவர் தொடர கூடாது என பகிரங்கமாகவே ஆளுநர் மீண்டும் தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு தனது அதிகாரத்தை பயனபடுத்தி இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நீடிக்க வைத்துள்ளது. இந்தநிலையில் ஆளுநர் ரவி தமிழக அரசின் செயல்பாடு தொடர்பாக உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுக்க இருப்பதாக கூறப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
டெல்லி செல்லும் ஆளுநர் ரவி
அதில், ஆளுநர் ரவி விரைவில் டெல்லி செல்ல இருப்பதாகவும், திமுக அரசு டிஸ்மிஸ் செய்ய இருப்பதாகவும் கூறி இருந்தார். அவர் கூறியபடியே ஆளுநர் ரவி இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் மத்திய அரசின் சட்டத்துறை அதிகாரிகளை சந்தித்து செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர தடை செய்ய சட்டங்கள் குறித்து கேட்டறிய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்