Is TN Governor ready to convene Assembly MK Stalin questioned

அரசியல் சாசன சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

சட்டப்படி சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் தயாராக உள்ளாரா? என்றும் அவர் வினவியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து திமுக., துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சர்ச்சை குறித்து திங்கள் கிழமை நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சார்பில், ஆளுநரின் முதன்மைச் செயலர் தரப்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. 

அந்த அறிக்கையில் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டுதான் கோவையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்று கூறப்படிருந்தது. இதுவும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில், இது சட்டத்தையே மதிக்காத ஒரு சூழ்நிலை என்பதுதான் என் கருத்து. ஆனால், அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் தான் பார்த்தேன் என்று அவர் சொல்கிறார். அப்படியெனில் நான் கேட்க விரும்புவது, இன்றைக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், ஒரு மைனாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில், உடனடியாக அவர் சட்டமன்றத்தைக் கூட்ட உத்தரவிட வேண்டும், அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.