தேர்வுக் கட்டணத்தை செலுத்தும்படி கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் மருத்துவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு பருவத் தேர்வுகளுக்காக வசூலிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை உடனடியாக பல்கலைக்கழகத்தில் செலுத்தும்படி கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எழுதாத தேர்வுக்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து பட்டப் படிப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்குமான பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. இறுதி பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்துப் பருவங்களிலும் தேர்ச்சி அளிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவம் தவிர்த்த அனைத்து பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகளில் இறுதிப் பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அத்தேர்வுகளை எழுதவிருந்த அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 23-ஆம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், அதில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, நடப்புப் பருவத் தேர்வுகளுக்கான அனைத்துக் கல்லூரிகளும் வசூலித்துள்ள தேர்வுக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரும் 7-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இறுதிப் பருவம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டணத்தை வசூலிப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் அதீத ஆர்வம் காட்டுவது நியாயமல்ல; அது அதன் வணிக நோக்கத்தையே காட்டுகிறது.

பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வசூலிக்கும் தேர்வுக்கட்டணம் என்பது தேர்வுக்கான வினாத் தாள்களை பேராசிரியர் குழுவை அமைத்து தயாரித்தல், தேர்வை நடத்துவதற்கான பல்வேறு நடைமுறைகள், விடைத்தாள்களை திருத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல், மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக வசூலிக்கப்படும் தொகை ஆகும். ஆனால், இப்போது இறுதிப் பருவத் தேர்வு தவிர மீதமுள்ள அனைத்துப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், வினாத்தாள் தயாரிப்பு, தேர்வுகளை நடத்துதல், விடைத்தாள்களை திருத்துதல் போன்ற எந்த பணியும் நடைபெறப் போவதில்லை. மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணியை மட்டும் தான் அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்ளவிருக்கிறது. அதற்காக தேர்வுக்கட்டணம் முழுவதையும் தங்களிடம் வழங்கும்படி பல்கலைக்கழகம் கோருவதை ஏற்க முடியாது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களிடமிருந்து ரூ.1200 முதல் ரூ.1750 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதுநிலை பொறியியல் மற்றும் கணிணி பயன்பாடு படிப்புகளுக்கு ரூ.3,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.நடப்பு பருவத் தேர்வுகளுக்காக வசூலிக்கப்பட்ட தேர்வுக்கட்டணத் தொகை சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்வு நடத்தப்படாத நிலையில், வசூலிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் முழுவதையும் மாணவர்களிடம் வழங்கும்படி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட வேண்டும். மதிப்பெண் சான்றிதழை பல்கலைக்கழகமே அச்சிட்டு வழங்க வேண்டும்.

தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களும், அவற்றுடன் இணைக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் ஒரு மாணவரிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.375 முதல் ரூ.1000 வரை வசூலித்துள்ளன. சாதாரண கல்லூரிகளில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், தேர்வுக் கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பிக் கொடுத்தால் அது கல்வி சார்ந்த பிற செலவுகளுக்கு பயன்படும். எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வுக் கட்டணத்தை அவர்களிடமே திருப்பி வழங்க அரசு ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.