’மாற்று அரசியல்’ எனும் லாஜிக்கை மையமாக வைத்துத்தான் ‘மய்யம்’ கட்சித்தலைவர் கமல்ஹாசன் களமாடிக் கொண்டிருக்கிறார். பெரியார் சிலை விஷயத்தில் ஹெச்.ராஜாவை ஸ்டாலின், வைகோ போன்றவர்கள் வார்த்தைகளால் காய்ச்சிக் கொண்டிருந்த போது ‘ஏன் உங்கள் வீரியத்தை விழலுக்கு இறைக்கிறீர்கள்?’ என்று நறுக்கென அந்த பிரச்னையை மாற்றுப் பாதையில் அணுகி ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று ஈரோடு சுற்றுப் பயணத்திலிருக்கும் கமல்ஹாசன், ’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

இது அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.யை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. காரணம், முள்ளங்கி பத்தை போல் அ.தி.மு.க.வின் கையில் 28 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர், இது போக மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் தனி. இவற்றின் வாயிலாகத்தான் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி எனும் மிகப்பெரிய சாதனையை அ.தி.மு.க.வுக்குப் பெற்றுத் தந்தார் ஜெயலலிதா.

இவ்வளவு பெரிய பலத்தை அக்கட்சி வைத்திருப்பதென்பது தேசிய அளவில் அசாதாரணமான பலம். இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைத்தான் சர்வ சாதாரணமாக ராஜினாமா மூலம் கெடுத்துக் கொள்ள சொல்லி விமர்சன பாய்ச்சல் காட்டுகிறார் கமல். இதுவே அ.தி.மு.க.வின் கடுப்புக்கு காரணம்.

பி.ஜே.பி. இதில் எரிச்சலாக காரணம், சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க.வின் எம்.பி. படையைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறார் மோடி. மத்திய அரசை நடத்திட என்னதான் தன்னிடம் பெரும்பான்மை இருந்தாலும் கூட, சில சட்டங்களை பாஸ் செய்வதற்கு ஆதரவு எம்.பி.க்கள் அதிகம் வேண்டும். அதற்காகத்தான் அ.தி.மு.க.வை கைக்குள்ளேயே வைத்திருக்கிறார் மோடி. இப்படிப்பட்ட நிலையில் கமலின் இந்த கூற்று அவர்களை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்?

ஆக மொத்தத்தில் கமல் பேச்சால் கடுப்பாகியிருக்கும் அ.தி.மு.க. ”எங்கள் எம்.பி.க்கள் மீது ராஜினாமா செய்ய சொல்லும் பாய்ச்சலை காட்டுகிறார் கமல். தமிழகத்தில் எங்கள் ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறாரே, அப்படி ஆட்சி கலைய வேண்டும் என்று நினைப்பாரேயானால் ஸ்டாலின் உட்பட தி.மு.க.

எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச்சொல்லும் தைரியம் இருக்கிறதா அவருக்கு. எதிர்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் ஆட்சிக்கு என்ன இக்கட்டு நேரும் என்பது அவருக்கு தெரியாதா?

ஸ்டாலினை ராஜினாமா செய்யச்சொல்லட்டுமே பார்க்கலாம்!” என்று கமல் மீது பாய்கிறார்கள்.