பாரதிய ஜனதா ரஜினிகாந்தின் வருகைக்காக அவரிடம் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே பாரதிய ஜனதாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அவரது மூத்த சம்பந்தியான தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இருக்கிறார். இது ரஜினிக்கே தெரியுமா? எனும் அளவுக்கு கஸ்தூரி செம்ம அடக்கமாக பா.ஜ.வில் இருக்கிறார். 
ஐ.ஐ.டி. நிகழ்வு, மாமல்லபுர உச்சிமாநாடு என்று மோடியின் பார்வை தொடர்ந்து தமிழகத்தின் மீது விழும் இந்த நிலையில் திடீரென கஸ்தூரி ராஜா வாயை திறந்து அரசியலெல்லாம் பேசியுள்ளார்.  பல வருடங்கள் கழித்து பாலிடிக்ஸ் பேசியிருக்கிறாரே என்று பார்த்தால், போகிற போக்கில்  எம்.ஜி.ஆரை அவர் உரசி வைக்க, தாம் தூம் தடால் புடாலென குதிக்க துவங்கிவிட்டனர். அப்படி என்ன சொல்லிவிட்டார் கஸ்தூரி ராஜா? என்பவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்....

”தமிழகத்தில் பா.ஜ. வளர என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். இங்கே மக்களின் மனநிலையே தப்பாக உள்ளது. இலவசங்களை கொடுத்துக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக வைத்திருக்கிறார்கள். மேலும் இங்கே தமிழ் என்றால் என்ன? அதன் பெருமை என்ன? என்றே தெரியாமல் தமிழன் என்ற அகம்பாவத்தோடு திரிகிறார்கள். என் சம்பந்தி ரஜினி கட்சி துவங்கினாலும் நான் பா.ஜ.வில்தான் இருப்பேன். நாம் மோடிக்காகத்தான் இந்த கட்சிக்கு வந்தேன். மற்ற கட்சிகள் எல்லாம் ‘கட்டிங்’குக்காக மட்டுமே வேலை செய்கிறது. ஆனால் மோடியும், பா.ஜ.வும் மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார்கள்.  

ரஜினி கட்சி துவங்கினால் எந்த கட்சியும் அவருக்கு ஈடாக நிற்க முடியாது. அவர் கட்சி துவங்கிவிட்டாலே மக்கள் அவருக்கு ஓட்டுப்போட முடிவெடுத்துவிடுவார்கள். ரஜினி பிரசாரத்திற்கு கூட செல்ல தேவையில்லை. அவருக்கு எதிரான பேச்சுக்களெல்லாம் சும்மா. அவரை மராட்டியன் என்று சொல்லும் பிரசாரமெல்லாம் ஈடுபடாது. எம்.ஜி.ஆர். மட்டும் என்ன தமிழரா? அவர் திறமையாக தமிழகத்தை ஆண்டார்தானே! தி.மு.க., பா.ம.க., வைகோ போன்றவர்கள் வெறும் காசுக்காக கூத்தடிக்கிறார்கள். மக்களின் அறியாமையே அவர்களின் முதலீடு.” என்று பொளந்திருக்கிறார். 

தேவையில்லாமல் எம்.ஜி.ஆரை. வம்புக்கிழுத்து கஸ்தூரி ராஜா பேசியிருப்பதால் அ.தி.மு.க. மந்திரிகள் உள்ளிட்டோர் டென்ஷனாகியுள்ளனர். அவருக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். வெயிட்டிங்!