இழந்த செல்வாக்கை மீண்டும் பெறவே காங்கிரசுடன் திமுக கைகோர்த்துள்ளது என்று தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ் பேசினார்.நாளை கன்னியாகுமரி நடக்கும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முரளிதர ராவ் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “கருணாநிதியின் மறைவுக்கு பிறகு திமுக செல்வாக்கை இழந்துவிட்டது” என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்தார். அவர் அறிவித்த பிறகு அதை கூட்டணி கட்சி தலைவர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு தி.மு.க. செல்வாக்கை இழந்துவிட்டது. அப்படி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறவே காங்கிரசுடன் திமுக கைகோர்த்துள்ளது.


அதே வேளையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதன் காரணமாகத்தான் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். தமிழகத்தில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் மிகப் பெரிய வெற்றி பெறும்.” என்று முரளிதர ராவ் தெரிவித்தார்.