புதிய டி.ஜி.பி நியமன விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த வாரம் சி.பி.ஐ அதிகாரிகள் தற்போதைய டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். நாள் முழுவதும் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து டி.ஜி.பி., ராஜேந்திரன் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் டி.ஜி.பியாக உள்ள ராஜேந்திரனுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சி.பி.ஐ ஆயத்தமாகி வருகிறது.

பதவிக் காலம் முடிந்த நிலையில் பணி நீட்டிப்பு செய்து ராஜேந்திரன் டி.ஜி.பி பதவியில் உள்ளார். இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணைக்கு டி.ஜி.பியாக சென்று ஆஜரானால் தமிழகத்திற்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு டி.கே.ராஜேந்திரன் விரைவில் டி.ஜி.பி பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. முதலில் பிரச்சனையை எதிர்கொள்ள தயாரான ராஜேந்திரன் தற்போது தனக்கு டி.ஜி.பி பதவி வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred



ஆனால் டி.ஜி.பியாக ஒருவரை தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிக்குமாறு ராஜேந்திரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் புதிய டி.ஜி.பி நியமனத்திலும் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். தற்போது சென்னை காவல் ஆணையராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கிறார். இதனால் உளவுத்துறை ஏ.டி.ஜி.பியாக விஸ்வநாதனை நியமித்துவிட்டு கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பொறுப்பையும் ஒப்படைக்கலாம் என்பது தான் எடப்பாடியின் திட்டம். 

இதற்கு முன்னதாக சென்னை காவல் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனும் இதே பாணியில் தான் சில காலம் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியை கூடுதலாக கவனித்து வந்தார். இதன்படியே விஸ்வநாதனை டி.ஜி.பியாக நியமிக்க எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரும், ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் ஒருவரும் விஸ்வாநதன் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாகிவிடக்கூடாது என்று காய் நகர்த்தி வருகின்றனர்.