முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, திருவாரூரில் நடைபெற உள்ள நிலையில், விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், திருவாரூர், வன்மீகபுரத்தில் வரும் 19 ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சியும், மாணவர்களுக்கு தனித்திறன் மற்றும் புத்தாக்கப் பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆடலரசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அரசின் அழைப்பிதழில் வாழ்த்துரை பிரிவில் திமுக தலைவர் கருணாநிதி, எம்.எல்.ஏ.க்கள் ஆடலரசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

சென்னை, கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று விழாவில், எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.