கொரோனா தொற்று உலக நாடுகளை மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது என்றெசொல்லலாம் அந்த அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் முதல் பெரிய தொழில்நிறுவனங்கள் வரைக்கும் யாரும் கூட்டங்களை நடத்துவதில்லை.தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கு கிடைத்துள்ள இணைய பயன்பாட்டின் மூலமே ஒவ்வொரு நகர்வுகளையும் அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது.அதில் இருந்து விடுபட்டு முதன் முறையாக சென்னை, கலைவாணர் அரங்கில், தற்காலிகமாக சட்டசபை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதன் முறையாக சட்டசபை மாற்று இடத்தில் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில், சட்டசபை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 14 முதல், 16ம் தேதி வரை, மூன்று நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும்.கலைவாணர் அரங்கை, தற்காலிக சட்டசபையாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை செய்து வருகின்றது.

கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில், சபை கூட இருக்கிறது. அரங்கில், 1,000 பேர் வரை அமர முடியும். இங்கு தரையில், 'கேலரி'கள் அமைக்கப்பட்டு, அதன் மேல், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வருகிறது. அதன் பின், இருக்கைகள் அமைக்கப்பட்டு, முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், 4 அடி இடைவெளியில் அமர வைக்கப்பட உள்ளனர்.

கட்டடத்தில் குளிர்சாதன வசதிக்கு மாற்றாக, மேற்கூரையில் சிறிய அளவிலான மின் விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன; ஆங்காங்கே ஒலிபெருக்கிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த அரங்கிற்கு வெளியே அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதற்கு, தனி அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டாவது தளத்தில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தரைதளத்தில், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இருக்கைகள் மற்றும் 'மைக் செட்' பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது.