ஆர்.கே.நகர் கள நிலவரம் சாதகமாக இல்லை என்று, உளவுத்துறை தமது  அறிக்கை மூலம் தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.  

ஆர்.கே.நகரில், அதிமுகவின் மற்றொரு அணியாக களமிறங்கி உள்ள பன்னீர் அணியை விட, அதற்கு காரணமான பா.ஜ.க வை குறி வைத்து தாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார் தினகரன்.

மற்றொரு பக்கம், ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆரிலும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான விமர்சங்களே அதிக அளவில் இடம் பெற தொடங்கி உள்ளன.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால், அது தங்களுக்கான அவமானம் என பா.ஜ.க நிர்வாகிகள் பார்க்கின்றனர். 

அதற்காகவே, தொகுதி முழுக்க நிறைந்திருக்கும் அட்டவணைப் பிரிவு மக்களை குறிவைத்து, கங்கைஅமரனை, ஆர்.கே.நகர் வேட்பாளராக  நிறுத்தியது பா.ஜ.க. 

தேர்தல் களத்தில், பா.ஜ.க வுக்கும் தினகரனுக்கு  நேரிடையான மோதல் எழுந்ததை அடுத்து, ஜெயா டி.வியிலும் நமது எம்.ஜி.ஆரிலும் பா.ஜ.க எதிர்ப்பு பிரசாரம் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.கவின் திட்டப்படிதான் பன்னீர்செல்வம் இயங்கி வருகிறார். வயதான காலத்தில் பிரசாரம் செய்வதற்குக்கூட மதுசூதனனால் முடியவில்லை.

இரட்டை இலையை முடக்கி, அம்மா உருவாக்கிய கட்சியை அழிப்பதுதான் பன்னீர்செல்வத்தின் முக்கியப் பணி. இதை முறியடிக்க வேண்டு என்றே தினகரன் தரப்பு பேசி வருகிறது.

அதே சமயம், தேர்தலில் பணத்தை வாரி இறைத்தால், பத்து சதவீத ஓட்டுகள் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும் என்று தினகரன் தரப்பினர் கூறுகின்றனர்.

மேலும், அண்ணா தி.மு.கவின் அடிப்படை வாக்குகள் எதுவும் தினகரனுக்குக் கிடைக்கப்போவதில்லை. பணத்தையும் அதிகாரத்தையும் வைத்துக்கொண்டு அடிப்படை வாக்குகளை வாங்க முடியாது. 

தொகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் ஜெயலலிதா மீது மிகுந்த பாசத்தில் இருக்கிறார்கள்.

அட்டவணை சமூகம் உள்பட உழைக்கும் மக்களில் பெரும் பகுதியினர் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

எனவே,ஆர்.கே.நகர் கள நிலவரம் தினகரனுக்கு சாதகமாக இல்லை என்றே உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

இதையடுத்து, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் களத்தில் இறக்கிவிடத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் ஆர்.கே.நகரை முற்றுகையிட உள்ளனர்.

அதற்கு பின்னரும், ஜெயலலிதா உருவாக்கிய அடிப்படை வாக்குகள் தினகரனுக்கு வருமா?' என்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.