உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திமுக முறையிடு செய்துள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 11-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை மறுநாள் நடக்கும் மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்தால், பிற்பகல் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடைபெற்றதாக தெரியவில்லை. பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, நாளை மறைமுகத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மறைமுக தேர்தல் நடத்தப்பட்டால் அது நியாயமான முறையில் நடைபெறாது. ஆகவே, தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆனந்த முருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டுள்ளார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.